Abstract:
சமயங்களின் முக்கியத்துவம் மருவி மக்களின் ஆன்மீக வாழ்வு தளர்ந்துள்ள சமகால பின்னணியில், பக்தியானது களியாட்டமாகவும் வேடிக்கையாகவும் மாறிவரும் நிலையிலேயே காணப்படுகின்றது. எனவே சமூகமானது சமயங்களின் முக்கியத்துவத்தையும் அதன் உண்மையான ஆன்மீகத்தையும் மீட்டெடுக்கும் கடப்பாட்டிலுள்ளது. இலங்கையின் வரலாற்றில் போர்த்துகேயரின் வருகையுடன் ஆரம்பமான கத்தோலிக்கத்தின் பரம்பல் பல்வேறு மாற்றங்களினூடாக இன்று வளர்ச்சிக் கண்டுள்ளது. ஆயினும் இலங்கையில் ஓல்லாந்தர், ஆங்கிலேயர் போன்றோரின் ஆட்சிக் காலங்களிலேயே ஏனைய கிறிஸ்தவ சபைகளின் வருகையும் கிறிஸ்தவத்தின் பரம்பலும் மேலும் விரிவாக்கம் அடைந்துள்ளது. இலங்கையில் இந்துக்கள் செறிந்து வாழும் வடக்கின் சப்த தீவுகளில் ஒன்றான காரைநகர் பிரதேசத்தில் போர்த்துக்கேயரின் ஆட்சி நிலவிய காலப்பகுதியில் கத்தோலிக்கம் இயேசு சபை மறைபரப்பாளர்களினால் பரப்பப்பட்டுள்ளது. கி.பி.1855ஆம் ஆண்டிலிருந்து ஏனைய கிறிஸ்தவ சபைகளின் பரவுகை இப்பகுதிகளில் இடம்பெற்றுள்ளது. ஆயினும் சமகாலத்தில் இப்பகுதிகளில் கிறிஸ்தவர்களின் தொகை மிகவும் குறைந்துள்ளது. எனவே தற்போது காரைநகர் பகுதியிலுள்ள கிறிஸ்தவமும் கிறிஸ்தவர்களும் குறித்த தேடலையும் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிப் படிநிலையையும் ஆய்வு செய்து, காரைநகர் பிரதேசத்தில் தற்போது நிலைகொண்டுள்ள திரு அவைகளின் பணிநிலைகளையும் சவால்களையும் எடுத்துரைக்கும் பிரதான நோக்கத்துடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுக்கான முதன்மை ஆதாரமாக நேர்காணல், வினாக்கொத்து மூலம் கள ஆய்வில் பெறப்பட்ட தரவுகள் அமையப்பெற்றுள்ளன. நூல்கள், ஆய்வு ஏடுகளில் இருந்து பெறப்பட்ட தரவுகள் இரண்டாம் நிலைத் தரவுகளாக இங்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது காரைநகர் பிரதேசத்தில் அமெரிக்கன் மிஷன், சீயோன் தேவாலயம் மற்றும் எபிநேசர் ஜெப ஆலயம் ஆகிய திரு அவைகளே தங்களது பணியினை ஆற்றி வருகின்றன. ஒப்பீட்டளவில் குறைந்த தொகைக் கிறிஸ்தவர்களையே இப்பிரதேசத்தில் காணலாம். அவர்களும் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே குறித்த கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கிவரும் சவால்கள் பற்றியும் அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் மற்றும் தொடர் நிலைத்திருப்பிற்கான பரிந்துரைகளையும் தெளிவுபடுத்துவதாக ஆய்வானது அமையப்பெற்றுள்ளது. மேலும் காரைநகர் பிரதேசத்தில் கிறிஸ்தவத் திரு அவைகளின் தொடக்கத்தையும் அது சமகாலத்தில் எதிர்நோக்கி வரும் சவால்களையும் வரலாற்று ஆதாரங்களுடன் முன்வைக்கும் ஆவணங்களின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு அமையும்.