Abstract:
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் என்ற அடையாளம் இலங்கையில்; முதன் முதலில் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்திலேயே நிலவியது. ஆங்கிலேயர் ஆசியா, ஆபிரிக்கா ஆகிய நாடுகளைக் கைப்பற்றி பாரம்பரிய பொருளாதார மற்றும் நவீன அபிவிருத்திகளை ஏற்படுத்திய காலப்பகுதியில், இவர்கள் தாங்கள் கைப்பற்றிய நிலவளம் உள்ள நாடுகளின் பல பிரதேசங்களில் ஐரோப்பிய நவீனத் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி பெருந்தோட்டப் பணப் பயிர்களை அதிகளவில் பயிரிட்டனர். இந்நிலையில் தென்னிந்தியாவின் கரையோரப் பிரதேசங்களை அண்டி வாழ்ந்த கிராமப்புற மக்களை இலங்கை, மலேசியா, மொராசியஸ், பிஜி தீவுகள் மற்றும் தென்னாபிரிக்கா போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். அவ்வாறே பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் தென்னிந்தியாவின் தமிழ் நாட்டுக் கரையோரப் பிரதேசத்தை அண்டி வறுமையில் வாழ்ந்த மக்களை, தங்களது சுய இலாப நோக்கம் கருதி இலங்கையின் பெருந்தோட்டத்துறை வேலைகளுக்காக அழைத்து வந்தனர். இலங்கையின் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையின் சமகால வளர்ச்சி நிலைக்கும் இம்மக்களே பிரதான காரணம் எனலாம். இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இம்மக்கள் முதன்முதலில் மன்னாரில் தரையிறக்கப்பட்டு, அங்கிருந்து இலங்கையின் மலையப்பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட இம்மக்கள், குறித்த பயணத்தின்போது அனுபவித்த துன்பகரமான நிகழ்வுகளையும் அவர்களது வரலாறு மற்றும் வாழ்வியற் பின்னணிகளையும் வெளிக்கொணர்ந்து அவற்றைக் கிறிஸ்தவ மற்றும் வரலாற்று நோக்கில் உற்றுநோக்குவதைப் பிரதான நோக்காமாகக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தென்னிந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட மக்களின் வாழ்வியற் பின்னணியை அறிய வரலாற்று முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. குறித்த மக்கள் தென்னிந்தியாவிலிருந்து மன்னாரில் தரையிறக்கப்பட்டமை குறித்த தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் என்பவற்றை இரண்டாம் நிலைத் தரவுகளில் இருந்து பெற்று தொகுத்தறிவு முறையில் ஆய்வில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முதல் நிலைத் தரவுகளைப் பெற அவதானிப்பு, கள ஆய்வு, நேர்காணல் என்பன ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மனித உரிமைகள் எனப்படுபவை அனைவருக்கும் சமமாகவே அமைதல் வேண்டும். ஆயினும் தென்னிந்திய மக்கள் இலங்கையில் அனுபவித்த இன்னல்களும் அநீதிகளும் எடுத்துரைக்கப்பட வேண்டிய விடயங்களாகும். 1800ஆம் ஆண்டு காலப்பகுதியில் 14 ஆண்களை உள்ளடக்கிய தென்னிந்தியக் குழு ஒன்று மன்னார் தீவை அண்டிய அரிப்புத்துறையை வந்தமை குறித்தும், கோப்பிச் செய்கைக்காக அழைத்து வரப்பட்ட குறித்த ஆண்கள், காலப்போக்கில் மீண்டும் தென்னிந்தியாவை நோக்கிப் பயணித்து, தொடர்ந்து 1823இல் இலங்கை அரசின் அனுமதியுடன் பெருந் தொகையான மக்கள் தென்னிந்தியாவில் இருந்து இலங்;கைக்கு வருகைதந்தனர். இவ்வாறு வந்தவர்கள் மனித உரிமை மீறல்கள் சார்ந்த பல பிரச்சனைகளை எதிர் நோக்கியுள்ளனர். குறிப்பாக இம்மக்கள் கடல்வழி தோணிகள் மூலம் அடிமைகள் போன்றே அழைத்துவரப்பட்டனர். அவர்களின் உயிர் பொருட்டாக மதிக்கப்படவில்லை, பலர் பயணத்தின்போது இறந்துள்ளார்கள், அடிப்படை வசதி இன்றி துன்பமடைந்தார்கள் என்னும் பல வரலாற்று ரீதியான தரவுகளை ஆய்வு தெளிவுபடுத்துவதால் ஆய்வானது இலங்கைக்கு வருகை தந்த தென்னிந்திய மக்கள் ஆங்கிலேயராலும் இலங்கை அரசாங்கத்தாலும் அனுபவித்த மனித உரிமைகள் சார் மீறல்கள் தொடர்பான இன்னல்களை ஆவணப்படுத்துவதாக அமைந்துள்ளது.