Abstract:
கலைகளைப் பற்றிய விளக்கம் தரும் டி.வி.நாராயணசாமி, 'கலை என்பது மக்களின்
வாழ்வியலை, பண்பாட்டை, நாகரிகத்தை எடுத்துக்காட்டும் கண்ணாடி. மக்கள் வாழ,
வளர சமுதாய நீதிகளையும் அறத் தத்துவங்களையும் தெளிவாகப் படம் பிடித்துக்
காட்டிடக் கலைகளைப் போல் வேறு சாதனம் இல்லை' (நாராயணசாமி, 1980. ப.23)
என்று கூறுகிறார். இக்கூற்று ஒரு நாட்டுக்கோ, ஒரு பிரதேசத்திற்கோ பொருந்தும்.
இந்தவகையில் பார்க்கும்போது ஈழத்தில் குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் மன்னர்கள்,
அரசவைப் புலவர்கள். ஆர்வலர்கள் ஆகியோரது ஆதரவோடு கலைகள் தோற்றம்பெற்று வளர்ச்சியடைந்துள்ளன. இக்கலைகளுள் இசைக்கலையானது
ஆலயங்கள் மூலமாகவும், வாய்மொழிப்பாடல்கள் மூலமாகவும், கூத்துக்கள்
இசைநாடகங்கள் மூலமாகவும், மக்களுக்குள் அறிமுகமாகி வரன்முறையான கர்நாடக
இசையாகப் பரிணமித்துள்ளது. இந்தவிதத்தில் ஈழத்திலுள்ள இந்து ஆலயங்கள்
புராணபடனம், திருமுறைகள், சிவாகமக் கிரியைகள், சங்கீத கதாப்பிரசங்கம், தவில்-
நாகசுரம் ஆகிய அம்சங்கள் மூலம் இசையை வளர்ப்பதற்குப்
பெரும்பங்காற்றியுள்ளன. இவற்றுள் தவில்-நாகசுரம் ஆகிய வாத்தியங்கள்
ஆலயங்களில் மட்டுமன்றி மங்கள நிகழ்வுகள், அரசுசார ; நிகழ்வுகள், நிறுவன
நிகழ்வுகள், பொது வைபவங்கள் ஆகியவற்றிலும் இன்றியமையாத ஒன்றாகக்
கருதப்படுகின்றன. ஆகவே, தவில்-நாகசுரக் கலைஞர்களின் ஈழத்து வருகைபற்றி இவ்
ஆய்வில் கூறப்படுகின்றது.