dc.description.abstract |
மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியிலுள்ள விடயங்களை அல்லது அதில் சொல்லப்பட்டதை, அதன் கருத்து மாறுபடாமலும் அதன் சுவை சிறிதும் குன்றாத வகையிலும் பிறிதொரு மொழியில் எடுத்துச் சொல்லும் செயற்பாடாகும். இங்கே சொல்லப்படும் கருத்து சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டு, அதன் உள்ளார்ந்த அர்த்தம் சரியாக விளங்கிக் கொள்ளப்பட்டு அதன் பின்னரேயே குறித்த அம் மொழிபெயர்ப்புப் பணி முன்னெடுக்கப்பட வேண்டும். மொழிபெயர்ப்பின் வெற்றியானது மூலப்படைப்பின் பொருள் சிதையாதவாறும் அதன் சுவை குன்றாமலும் பிறிதொருமொழியில் கொண்டு சேர்ப்பதிலேயே தங்கியுள்ளது. இவ்வாறு கீழை நாட்டுப்பனுவல்கள் பலவும் மேலைநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுவருகின்றன. இந்த அரிய முயற்சியில் ஈழத்தவர் பலரும் ஈடுபட்டமை மறுப்பதற்கில்லை. கீழைநாட்டுப்பனுவல்களில் கூறப்படும் தத்துவங்கள் பலவும் மேலைநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டாலும் அவற்றுள் பொதிந்துள்ள உணர்வுபூர்வமான அர்த்தங்களைக் கொள்ளல்-கொடுத்தல் செய்வதென்பது பெரிதும் சவாலான ஒருவிடயமாகும். அந்தவகையில் வயலற் பரஞ்சோதி எனும் பெண்மணி சிவஞானபோதத்தை ஆங்கில மொழியில் கொண்டு செல்லும்போது உள்ளார்ந்த உண்மை அர்த்தங்களைக் கொண்டுவருவதில் சிறிது சிதைவு கண்டுள்ளதாக சைவப்பெரியார் எஸ்.சிவபாதசுந்தரம் அவர்களால் கூறப்படும் கருத்துக்களே இங்கு நோக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு நுணுகி ஆராய்ந்து ஈழத்தவர் ஒருவர் கருத்துக் கூறுகிறார் என்றால் உண்மையில் குறிப்பிடத்தக்க ஒரு விடயம் ஆகும். இதனைக் கண்டறிவது மொழிபெயர்ப்பில் உள்ளார்ந்த அர்த்தத்துக்கு உள்ள முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகவும், மொழிபெயர்ப்பில் பொருட்சிதைவு ஏற்படாவண்ணம் மூல ஆக்கத்துக்கு விசுவாசமான முறையில் கொண்டு செல்வதன் அவசியத்தையும், மொழிபெயர்ப்பாளர் எவ்வளவு அவதானமாகச் செயற்படவேண்டும் என்பதைக் கூறுவதாகவும் அமையும். மெய்கண்டதேவர் அருளிய சிவஞானபோதம், வயலற் பரஞ்சோதி ஆங்கிலமொழியில் அளித்துள்ள சிவஞானபோதம், A Rejoinder by S.Shivapadasundaram என்பன முதல்நிலைவளங்களாக இவ் ஆய்வில் கொள்ளப்படுகின்றன. |
en_US |