Abstract:
மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியில் உள்ள விடயங்களை அதில் எந்த விதமான களங்கமும் ஏற்படாத வகையில் பிறிதொருமொழிக்கு மொழி மாற்றம் செய்வதாகும். இவ்வாறான செயற்பாட்டில் பல்வேறு முறைமைகள் பின்பற்றப்படுகின்றன. மொழி பெயர்ப்பு செய்யப்படுவதன் நோக்கம், காரணங்கள், மொழிபெயர்ப்பு செய்யப்படும் விடயம், யாரை இலக்காகக் கொண்டு அம் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது, அதன் தேவை போன்ற பல்வேறு விடயங்களின் அடிப்படையில் குறித்த ஒரு முறைமை பொருத்தமானதாக மொழிபெயர்ப்பாளரால் தேர்ந்தெடுக்கப்படும். பத்தொன்பதாம் நூற்றாண்டளவில் கீழைத்தேசங்களுக்கு வருகை தந்த மேலை நாட்டவர் பலரும் தமிழ் இலக்கியப் பனுவல்களை மொழிபெயர்ப்பு செய்யும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். ஜோர்ஜ் அக்லோபோப் என்ற மதகுருவும் இந்தப்பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். அவர் நாலடியார், திருக்குறள், திருவாசகம் ஆகிய பனுவல்களை தமிழ் மொழியிலிருந்து ஆங்கில மொழிக்கு மொழி பெயர்ப்பு செய்தார். இவற்றில் திருவாசகமொழி பெயர்ப்பு குறிப்பிடத்தக்கதாகும். ஞான நெறியில் நின்று இறைவன் மீது மாணிக்கவாசக சுவாமிகளால் பாடப்பெற்ற திருவாசகம் எனும் தேன் துளிகள் ஈர்த்து ஈர்த்து உருக வைக்கும் தன்மை வாய்ந்தவை. இவற்றில் முதன்மையானது சிவபுராணம் ஆகும்.
இந்த ஆய்வில் சிவபுராண மொழிபெயர்ப்பில் ஜோர்ஜ் அக்லோ போப் கையாண்ட மொழிபெயர்ப்பு முறைமைகள் பற்றியே ஆய்வு செய்யப்படுகிறது. உண்மையில் வெளிநாட்டு மதகுரு ஒருவர் தமிழ்ப்பனுவல் ஒன்றை ஆழ்ந்து கற்று மொழிபெயர்ப்பு செய்துள்ளமை போற்றற்குரிய விடயமாகும். சிவபுராணத்தை மொழிபெயர்க்கும்போது ஜி.யு.போப் கையாண்ட மொழிபெயர்ப்பு முறைமைகளை இனங்காண்பதும் அந்த முறைமைகளில் அவர் கையாண்ட உத்திகளை அறிதலுமே இவ் ஆய்வின் நோக்கம் ஆகும். இவற்றை அறிந்து கொள்வது எதிர்கால மொழிபெயர்ப்பாளர்களுக்கு பயன் மிக்கதாக அமையும். மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணமும் ஜோர்ஜ் அக்லோ போப் எனப்படும் மதகுருவினுடைய சிவபுராண மொழிபெயர்ப்பும் முதல் நிலை வளங்களாக இந்த ஆய்வில் கொள்ளப்படுகின்றன.