Abstract:
இறைவனின் படைப்பில் பெண் என்பவர் சிறப்பிடத்தைப் பெறுவதோடு திருவிவிலியமும் ஆரம்பம் முதல்
இறுதி வரை பெண்களின் சிறப்பைக் குறித்துப் பேசுகின்றது. விவிலியத்தில் பெண்கள் செப
வீராங்கனைகளாகவும் இறைவாக்கினர்களாகவும் படைகளை வழிநடத்திய தளபதிகளாகவும் சிறந்த
குடும்பத் தலைவிகளாகவும் விளங்குகின்றனர். பெண்களின் வாழ்க்கை வரலாற்றுச் செய்திகள் அவர்களின்
தலைமைத்துவத்தின் அடையாளங்களாகத் திகழ்ந்துள்ளன என்பது நிதர்சனமாகும். அந்த வகையில்
விவிலியம்; கூறும் பெண்களுள் சிறப்பிடம் பெறும் நீதித் தலைவரான தெபோராவின்
தலைமைத்துவத்தினைக் குறித்த ஒரு பெண்ணியக் கண்ணோட்டத்தை எடுத்துக் கூறுவதாக இவ் ஆய்வு
முயற்சியானது அமைகிறது. 'இஸ்ரயேலின் தாய்' எனும் சிறப்புப் பட்டத்திற்கு உரித்தான வீர மங்கையாக
நீதித் தலைவர் தெபோரா விளங்கியதையும் துணிச்சல், வீரம், நம்பிக்கை போன்ற சிறப்புமிக்க பண்புகளைத்
தன்னகத்தே கொண்டிருந்த இவ்வீரப் பெண், அனைத்துப் பெண்களுக்கும் சிறந்ததோர் முன்மாதிரிகையாக
வாழ்ந்துள்ளார் என்பதையும் இந்த ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது. அத்துடன் தெபோரா குறித்த வரலாற்று
விடயங்களை அறிந்து கொள்ள வரலாற்று முறையியல் கையாளப்பட்டுள்ளது. பெண் நீதித்தலைவரான
தெபோராவின் கீழ், இஸ்ரயேல் இனம் முழுவதும் 40 வருடங்கள் அமைதியான, போரற்ற சூழலில்
வாழ்ந்திருக்க வேண்டும், இறைவனின் மீட்புத் திட்டத்தில் ஆண், பெண் என்ற வேறுபாடில்லை. மாறாக
அவர் யாரைக் கொண்டும் தமது திட்டத்தை நிறைவேற்றுவார் மற்றும் ஆண்களைப் போலவே பெண்களும்
அனைத்து விடயங்களிலும் சமபலம் கொண்டவர்களாகக் காணப்பட்டார்கள். எனவே அவர்களாலும் ஒரு
நாட்டையோ அல்லது நிர்வாகத்தையோ தலைமை தாங்கி நடத்த முடியும் போன்றவை ஆய்வின்
கருதுகோள்களாக முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் தெபோரா பற்றிப் பல நூல்களில்
எடுத்துரைக்கப்பட்டாலும், தெபோராவின் தலைமைத்துவச் சிறப்பம்சங்கள் அக்காலச் சூழலில் தேவையாக
இருந்தது என்பதை எடுத்துரைப்பதும் சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தெபோராக்களை
அடையாளம் காண்பதும் ஆய்வின் பிரச்சனையாக எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ் ஆய்வானது
மேற்கொள்ளப்பட்டுள்ளது. தெபோராவின் இத் தலைமைத்துவமானது காலத்தால் அழியாதது. இஸ்ரயேல்
சமூகத்தைக் குறித்த அக்கறையும் பற்றும் அவருடைய செயல்களில் வெளிப்பட்டமையை இவ் ஆய்வு
எடுத்துரைக்கிறது. நீதித் தலைவர்கள் நூலில் காணப்படும் பெரும்பாலான நீதித் தலைவர்கள் அக்காலத்தில்
நடைபெற்ற போர்களில் வெற்றி பெற்ற பின்னரே நீதித் தலைவர்கள் என்று அழைக்கப்பட்ட நிலையில்,
தெபோரா போருக்கு முன்பதாகவே நீதித் தலைவர் என அழைக்கப்பட்டிருப்பது சிறப்பிற்குரிய விடயமாக
நோக்கப்பட்டுள்ளது. இஸ்ரயேல் மக்களையும் இறைவனையும் இணைக்கும் பாலமாகத் தெபோரா
செயற்பட்டார் என்பது தொகுத்தறிவு முறையியல் மூலம் வெளிக்கொணரப்படுகிறது. இஸ்ரயேல்
மக்களிடையே எழும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் தலைமை நீதிபதியாகக் காணப்பட்டதோடு
அக்காலத்தில் வாழ்ந்த அனைத்துப் பெண்களுக்கும் முன்னுதாரணமாகவும் சமூகத்தினை நியாயம்
விசாரித்துச் சீர்படுத்திய பெண்ணாகவும் நீதித் தலைவர் தெபோரா அடையாளப்படுத்தப்படுகின்றார்
என்னும் விடயமானது ஆய்வின் மூலமாக முக்கியப்படுத்தப்படுகிறது. தெபோரா பற்றிப் பலரும் அறிந்திராத
வரலாற்று விடயங்களையும் பெண்களின் ஆளுமைத் தன்மைகளையும் வெளிக்கொணர்தல், எதிர்காலத்தில்
பெண்களின் தலைமைத்துவம் அனைத்துத் துறைகளிலும் மென்மேலும் வளர வேண்டும் என்பதை
வலியுறுத்தல் மற்றும் நீதித்தலைவர் தெபோராவின் வாழ்வியலைச் சமகாலத்தில் இனங்காணக் கூடியதாக
இருத்தல் போன்றன இவ் ஆய்வின் பயன்களாகப் பார்க்கப்படுகின்றன. இன்றைய தலைமுறைப்
பெண்களுக்கு தெபோராவின் வாழ்வியல் ஓர் உந்து சக்தியாக உள்ளதா? என்பது ஆராயப்பட்டுள்ளது. நீதித்
தலைவர் தெபோராவின் முழு வாழ்வியலையும் ஆராய்ந்து, வாழ்வியல் அம்சங்களின் மூலமாக
வெளிப்படுத்தப்படுகின்ற தலைமைத்துவப் பண்புகளைப் பெண்ணியப் பார்வையில் விரிவாகவும்
ஆழமாகவும் மதிப்பீடு செய்வதாக இவ் ஆய்வானது அமைந்து காணப்படுகின்றது. அத்துடன் நீதித்
தலைவர் தெபோராவின் தலைமைத்துவப் பண்புகளைத் தம்மகத்தே கொண்டு வாழ்கின்ற எமது நாட்டின்
பெண் ஆளுமைகளை ஆராய்ந்து அவர்களது வாழ்வியல் வெளிப்படுத்தப்படுகின்ற தலைமைத்துவப்
பண்புகளை முன்வைப்பதாக இவ்வாய்வு அமைந்துள்ளது.