Abstract:
கிறிஸ்தவ வரலாற்றுப் பின்னணியில் உரோமைய கலாபனைகள் இடம்பெற்ற முதல் மூன்று
நூற்றாண்டுகள் (கி.பி.1-3) கிறிஸ்தவம் தடைசெய்யப்பட்ட நிலையில் காணப்பட்டது. இதனால்
கிறிஸ்தவர்களுக்கு நிலச்சுரங்கத்துக் கல்லறைகள், வசதி படைத்த தனியாரின் இல்லங்கள் என்பனவே
மறைமுகமான வழிபாட்டு இடங்களாகப் பயன்பட்டுள்ளன. ஆயினும் கொண்சன்ரையின் மன்னரின்
ஆட்சியில் (கி.பி.313) கிறிஸ்தவம் சட்டப்பூர்வமான அங்கிகாரத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, கிறிஸ்தவ
வழிபாட்டு மையங்களான ஆலய கட்டுமானங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. சமயச் சுதந்திரம்,
கிறிஸ்தவர்களின் தொகை பெருக்கம் என்பன இதற்கான பிரதான காரணிகளாகும். மேலும் ஐரோப்பிய
நாடுகள் கிறிஸ்தவ மறையைத் தழுவியதைத் தொடர்ந்து, பல பிரமாண்டமான ஆலயங்கள் ஐரோப்பியக்
கட்டடக் கலைபாணியில் கட்டப்பட்டுள்ளன. அதுபோன்று ஆசியாவிலும் கிறிஸ்தவ மறை பரப்பப்பட்ட
பின்னணியில் பல ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆய்வானது இலங்கையிலுள்ள அங்கிலிக்கன் திரு
அவையின் கட்டடக்கலையை மையப்படுத்தியதாக அமைந்தாலும் அதன் வரையறையைக் கருத்திற்
கொண்டு, இலங்கையின் சுதேச கலையம்சங்களை உள்வாங்கிக் கட்டப்பட்டுள்ள தெரிவு செய்யப்பட்ட இரு
அங்கிலிக்கன் ஆலயங்களை மட்டுமே ஆய்வு மையப்படுத்தியுள்ளது. இலங்கையில் காலனித்துவ ஆட்சி
நிலவியபோதும், அதன் பின்னரும் பல கிறிஸ்தவ ஆலயங்கள் தோன்றியுள்ளன. அவ்வாறு தோன்றிய
கிறிஸ்தவ ஆலயங்கள் குறித்து சில ஆய்வுகள் எழுந்திருப்பினும், குறிப்பாக அங்கிலிக்கன் திரு அவை
ஆலயங்களின் கட்டடக் கலையம்சங்கள் ஏன்? சுதேச கலையம்சங்களுடன் தமிழில் ஒப்பு நோக்கு ரீதியில்
ஆழமான ஆய்வுக் கண்ணோட்டத்தில் உற்றுநோக்கப்படவில்லை என்னும் வினாவானது ஆய்வுத்
தேடலுக்கு வித்திட்டுள்ளது. இலங்கையிலுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் அங்கிலிக்கன் திரு அவை
ஆலயங்களில் அதிகமான சுதேச கலையம்சங்களின் செல்வாக்கு காணப்படுகின்றது என்னும் கருதுகோளை
ஆய்வு மையப்படுத்தியுள்ளது. இலங்கையிலுள்ள கிறிஸ்தவ ஆலய கட்டுமானங்களில் இலங்கையின் சுதேச
கலையம்சங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன என்பதை எடுத்துரைப்பது ஆய்வின் பிரதானமான
நோக்கமாகும். இதற்கென நேர்காணல், கள ஆய்வு மூலம் அவதானிப்பு முறையும் இலங்கையின் சுதேச
கலை வடிவங்கள் தொடர்பான தேடலுக்கு நூல்கள், சஞ்சிகைகள், ஆய்வு ஏடுகள் மூலம் பெறப்பட்ட
தரவுகள் தொகுத்தறிவு முறை மற்றும் ஒப்பீட்டாய்வு முறையுடன் முன்வைக்கப்பட்டுள்ளன. கத்தோலிக்கத்
திரு அவையில் சுதேச பண்பாடுகளை உள்வாங்கி, தமது வழிபாடுகளை மேற்கொள்வதற்கான பாதையை
இரண்டாம் வத்திக்கான சங்கம் திறந்துள்ளது. கிறிஸ்தவ ஆலய கட்டுமானங்களிலும் இதன் செல்வாக்கு
மிகுந்துள்ளது. கிறிஸ்தவ மரபுகளை தேசியமயமாக்கும் பின்னணியில் அங்கிலிக்கன் ஆலயங்களின் கட்டட
அமைப்பில் பௌத்த, இந்து சமயத் தலங்களின் கட்டடக் கலையின் செல்வாக்கும் பிரதான
இடம்பிடித்துள்ளது. கட்டடத்தின் திட்ட அமைப்பு, கூரையமைப்பு, தூண்கள், செதுக்குக் கலையம்சங்கள்,
ஆலய அலங்காரங்கள், ஓவிய பிரதிபலிப்புக்கள், ஆலயத்தை அலங்கரிக்கும் கலைப் பொருட்கள்
என்பவற்றிலும் சுதேச கலையம்சங்களின் செல்வாக்கை அவதானிக்கலாம். இவ்வாறு சுதேச கலை
வடிவங்களை உள்வாங்கிக் கட்டப்பட்டுள்ள ஆலயங்களில் சுதேச கலை வடிவங்களின் செல்வாக்குக்
காணப்பட்டாலும் அவற்றில் மிகப் பொருத்தமான தூய தன்மைகள் காணப்படுகின்றனவா என்பதும்
ஆய்வுத் தேடலாகவுள்ளது. ஆய்வானது கிறிஸ்தவ ஆலயங்களின் கட்டடக்கலையை மையப்படுத்திக்
காணப்பட்டாலும் அதன் ஒப்பீட்டுப் பார்வையானது சுதேச கலை வடிவங்களின் சிறப்புக்களையும்
எடுத்துரைக்கும் வகையில் அமையும். அந்த வகையில் ஆய்வானது இலங்கையின் காலனித்துவ ஆட்சியைத்
தொடர்ந்து சுதேசமயமாதலானது கிறிஸ்தவ கட்டடக்கலையிலும் செல்வாக்குச் செலுத்தியுள்ளதைப் பதிவு
செய்துள்ளது.