Abstract:
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான பால்நிலை வேறுபாட்டின் வெளிப்பாடே, பெண்களுக்கு
எதிரான வன்முறைக்கு வித்திடுகின்றது. இவ்வாறான பால்நிலை வேறுபாடானது, பெண்கள் பல
சவால்களை எதிர்கொள்வதற்கும் அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கும் காரணமாக அமைகின்றன.
அந்தவகையில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை தீர்ப்பதற்கும், அவர்களுக்குரிய நீதியைப் பெற்றுக்
கொடுப்பதற்கும் பெண்கள் சார்ந்த அமைப்புக்கள் பல இலங்கையில் தோற்றம் பெற்றுள்ளன. அவ்வாறான
பின்னணியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மல்லாகப் பிரதேசத்தில் 'தேவை நாடும் மகளிர்' அமைப்பு
தோற்றம் பெற்றுள்ளது. இவ்வமைப்பானது பெண்களை வலுவூட்டுவதில் பாரிய அங்கம் வகிக்கின்றது.
திருவிவிலியத்தில் 'கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப்
படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.' (தொடக்கநூல் 1:26) எனக்
கூறப்பட்டுள்ளது. இதற்கு வலுசேர்பதாகக் கிறிஸ்தவ பெண்ணிய இறையியல் கோட்பாடுகள்
அமைந்துள்ளன. இதன் அடிப்படையில் கிறிஸ்தவ பெண்ணிய இறையியல் கோட்பாடுகளே ஆய்வுக்குரிய
மையமாகும். சமூகத்தில் பெண்கள் மீது அநீதிகள் மற்றும் அடக்குமுறைகள் திணிக்கப்படுகின்ற போது,
அதற்கு தீர்வு காணுகின்ற அமைப்புக்கள் பல இருந்தும் அவற்றின் செயற்பாடுகள் பற்றிய தெளிவு
சமூகத்தின் மத்தியில் காணப்படாமையினால், பெண்கள் சார்ந்த வன்முறைகள் அதிகரித்துச்
செல்கின்றமையே ஆய்வுப் பிரச்சினையாகக் காணப்படுகின்றது. கிறிஸ்தவ பெண்ணிய இறையியலின்
பின்னணியில் பெண்களை வலுவூட்டும் கோட்பாடுகளை 'தேவை நாடும் மகளிர்' அமைப்பின்
முயற்சிகளுடன் ஒப்பிட்டு நோக்கப்படாமை ஆய்வுத் தேடலிற்கு களம் அமைத்தது. இப்பின்னணியில்
'தேவை நாடும் மகளிர்' அமைப்பின் செயற்பாடுகள் பெண்கள் சார்ந்த வன்முறைகளை குறைக்க
எவ்வகையில் உதவுகின்றது என ஆராயப்பட்டுள்ளது. பெண்களை வலுவூட்டுவதில் 'தேவை நாடும் மகளிர்'
அமைப்பின் முயற்சிகளை கிறிஸ்தவ பெண்ணிய இறையியல் கோட்பாடுகளுடன் ஒப்பீடு செய்து 'தேவை
நாடும் மகளிர்' அமைப்பினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை மேம்படுத்துவதற்கான
பரிந்துரைகளை முன்வைப்பதே ஆய்வின் நோக்கமாகும். கிறிஸ்தவ பெண்ணிய இறையியல் பின்னணியில்
பெண்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தொடர்பான பல்வேறு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
'தேவை நாடும் மகளிர்' அமைப்பின் செயற்றிட்டங்களை மேம்படுத்துவதற்கான தேவைபாடுகள் உண்டு
என்னும் இரு கருதுகோள்களும் ஆய்வில் மையப்படுத்தப்பட்டுள்ளது. நூல்கள், சஞ்சிகைகள் ஊடாகச்
சேகரிக்கப்பட்ட கிறிஸ்தவப் பெண்ணிய இறையியற் கோட்பாடுகளையும் மல்லாகப் பிரதேசத்தில்
காணப்படுகின்ற 'தேவை நாடும் மகளிர்' அமைப்பின் நிலைய முகாமையாளரிடம் மேற்கொள்ளப்பட்ட
நேர்காணல் மற்றும் கள ஆய்வு என்பவற்றின் வழியாக பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளையும்
அடிப்படையாகக் கொண்டு இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்களை வலுவூட்டுவதில்
இவ்வமைப்பின் முயற்சிகளை கிறிஸ்தவ பெண்ணிய இறையியல் கோட்பாடுகளுடன் ஒப்பீடு செய்து,
அமைப்பினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை
முன்வைப்பதற்கு தொகுத்துணர்வு முறை கையாளப்பட்டுள்ளது. இதன் ஊடாக கிறிஸ்தவ பெண்ணிய
இறையியல் கோட்பாடுகள், 'தேவை நாடும் மகளிர்' அமைப்பினால் இனங்காணப்பட்டுள்ள பெண்கள்
சார்ந்த வன்முறைகள், வன்முறைகளுக்கான காரணங்கள், பெண்களை வலுவூட்டுவதில் 'தேவை நாடும்
மகளிர்' அமைப்பு மேற்கொள்ளும் செயற்பாடுகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் என்பன
அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வமைப்பானது பெண்களை வலுவூட்டுவதில் பல செயற்பாடுகளை
மேற்கொண்டு வந்தாலும் வன்முறையினால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையானது அதிகரித்து
செல்கின்றமையும் அமைப்பின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான தேவைபாடுகள்
காணப்படுகின்றமையும் ஆய்வின் வழியாக கண்டறியப்பட்டுள்ளது. 'தேவை நாடும் மகளிர்' அமைப்பின்
செயற்பாடுகள் பற்றிய தெளிவினை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதன் மூலம் நீண்ட காலமாக சமூக,
பண்பாட்டு ரீதியில் பெண்கள் மத்தியில் காணப்படும் கட்டமைப்பில் மாற்றத்தைக் ஏற்படுத்துவதே
இவ்வாய்வின் பயன்பாடாக எதிர்பார்க்கப்படுகின்றது.