Abstract:
கத்தோலிக்கத் திரு அவையின் திருமணம் எனும் அருளடையாளமானது குடும்பம் எனும் அமைப்பினை
உருவாக்குகின்றது. இக் குடும்பமானது சமூகத்தின் அடிப்படை அலகாகக் காணப்படுவதுடன், அதன்
சிறப்பும் ஒழுங்கமைப்பும் வளர்ச்சியும் ஒவ்வொரு குடும்பங்களிலும் திரு அவையின் ஒழுக்க
விழுமியங்களைக் கடைப்பிடிப்பதில் தங்கியுள்ளது. அத்துடன் திருமணத்தின் பண்புகளாகிய ஒருமை,
முறிவுபடாத்தன்மை என்பன அன்பினால் கட்டியெழுப்பப்பட்டு திருமணத்தின் சிறப்புப் பண்பானது
உறுதிப்படுத்தப்படுகின்றது. அந்தவகையில் கத்தோலிக்கத் திரு அவையின் வழங்கப்படும் ஏழு
அருளடையாளங்களில் ஒன்றாக திருமண என்னும் அருளடையாளம் காணப்படுகின்றது. இவ் ஆய்வானது
யாழ் குடாநாட்டின் தெரிவு செய்யப்பட்ட ஐந்து ஆலயங்களினை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஐந்து
வருட காலத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருமணத்தின் ஒருமை, முறிவுபடாத்தன்மைக்கு
சவாலாக அமையும் ஒழுக்கப் பிறழ்வுகள் ஆய்விற்க்கு உட்படுத்தப்பட்டுள்ளது. திருமணத்தின் வழியாக
உருவாகும் குடும்ப அமைப்பானது சமூகத்தின் அடிப்படை அலகாகக் காணப்படினும் இச்சமூகத்தில் பல
நன்மைகளும் தீமைகளும் நிறைந்து காணப்படுகின்றன. இத் தீமையான விடயங்கள் மனிதர்களின் ஒழுக்க
பிறழ்வுகளுக்கு காரணமாக அமைகின்றன. இவை திருமண அருளடையாளத்திற்கு பல சவால்களையும்,
குடும்பங்களில் சிதைவுகளையும், கணவன் - மனைவிக்கு இடையிலான மண முறிவுக்கும் காரணமாகவும்
அமைகின்றது. இவ்வாறான பிரச்சனைகளை பங்கு ஆலயங்கள் ஊடாகக் கண்டறிந்து திருமண
அருளடையாளம் சார்ந்த திரு அவையினுடைய ஒழுக்கவியல் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி,
திரு அவையின் பாரம்பரிய ஒழுக்கவியலையும், நம்பிக்கையையும், கருத்துருவாக்கத்தையும்
தெளிவுபடுத்தும் நோக்கினை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டது. எனவே
இவ்வாய்வுக்கான தரவுகள் இவ்வாய்வுடன் நூல்கள், கட்டுரைகள், சஞ்சிகைகள் போன்றவற்றிலிருந்து
பெறப்பட்ட கருத்துக்கள் தொகுத்தறிவு முறையியலும் திருமணம் சார்ந்த ஒழுக்கப் பிறழ்வுகள் பற்றிய முதன்
நிலைத் தரவுகளைப் பெற்றுக்கொள்ள நேர்காணல், கள ஆய்வு மூலம் அவதானிப்பு முறையும் திருமண
அருளடையாளம் குறித்த திரு அவையினுடைய போதனைகள் பரிந்துரைகளும் பற்றிய விடயங்களினை
பெற்றுக்கொள்ள கள ஆய்வு, நேர்காணல், வினா கொத்து ஆகிய முறைகளும் கையாளப்பட்டுள்ளன.
சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பத்தில் அதன் சிறப்பும், ஒழுங்கமைப்பும், வளர்ச்சியும் ஒழுக்க
விழுமியங்களை கடைப்பிடிப்பதிலேயே தங்கியுள்ளது. எனவே குடும்பங்கள் ஒழுக்கமுடையனவாக விளங்க
வேண்டும் எனில் அவை சமய விழும்பியங்களைப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு பின்பற்றும் போது
ஒழுக்கவியல் பிறழ்வு நிலைகள் ஏற்படுவதை முடிந்தளவு சீர் செய்வதுடன் கத்தோலிக்கத் திரு அவையின்
திருமண அருளடையாளம் சவால்களை எதிர்கொள்வதைத் தடுத்து திருமண அருளடையாளம் சார்ந்த
திருஅவையின் பாரம்பரிய போதனைகளையும் கருத்தியல்களையும் பாதுகாக்கவும் அடுத்தடுத்த
தலைமுறையினருக்கு கையளிக்கவும் முடியும். இதன் அடிப்படையில் திருஅவையில் திருத்தந்தையர்களின்
திருத்தூது ஊக்கவுரை மற்றும் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் திருமண அருளடையாளம் தொடர்பாக
முன்வைக்கப்படும் ஆழமான கருத்துக்களை தெளிவுப்படுத்தி திருமண அருளடையாளம் எதிர்கொள்ளும்
சவால்களை தடுப்பதற்கான முயற்சிகளையும் மற்றும் பங்கு ஆலயங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும்
திருமண அருளடையாளம் சார்ந்த பணிகள் அனைத்து மக்களிடமும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்
என்பதையும் தமது பணிகளை மேலும் ஊக்கப்படுத்தியும் துரிதப்படுத்தவும் வேண்டும் என்ற சிந்தனையின்
அடிப்படையில் சில பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் வழியாக பங்கு ஆலயம் ஊடாக
மக்களிடையே உள்ள ஒழுக்கப் பிறழ்வு நிலைகள் ஏற்படாமல் குறைக்க இப் பரிந்துரைகள் உறுதுணையாக
அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.