Abstract:
திரு அவையானது இன்று கிறிஸ்துவின் இடமாக இருந்து அவரின் பணியைத் தொடர்ந்தாற்றி, மக்களை
நல்வழிப்படுத்தி அவர்களை ஒரு நாள் மறுவுலகிற்கு இட்டுச் செல்வதே அதன் பணியாகும். மக்களின்
வாழ்வில் அக்கறை கொண்டுள்ள திரு அவையானது மக்களின் நலன், அவர்களின் அன்றாட வாழ்க்கைத்
தேவைகள், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்களின் ஏக்கங்கள், கவலைகள் பற்றிய
அக்கறையோ, கரிசனையோ இன்றி இருக்க முடியாது. அவற்றில் பங்கெடுப்பதும் அத்தகைய
சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு இயன்ற முறைகளில் உதவுவதும் திரு அவையின் உரிமையும் கடமையும்
ஆகும். ஏனெனில் மக்களைப் பாதிக்கும் அனைத்தும் திரு அவையையும் பாதிக்கின்றன. மக்கள் பிரச்சினை
அனைத்தும் திரு அவையின் பிரச்சினையே. எனவே மக்களாலானதே திரு அவையாகும். இத் திரு
அவையினால் மேற்கொள்ளப்படும் பணிகளில் ஒன்றான உள ஆற்றுப்படுத்தல் பணி குறித்தே இவ் ஆய்வு
அமைந்துள்ளது. அதாவது மக்களிற்கு ஏற்படுகின்ற உளநலம் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு
பல்வேறு வழிகாட்டல்கள் காணப்படுகின்ற பட்சத்தில் குறிப்பாக அகவொளி நிலையத்தால்
வழங்கப்படுகின்ற உளவள ஆற்றுப்படுத்தல் வழிகாட்டல்கள் குறித்த விடயங்களே இவ் ஆய்வில்
ஆராயப்படுகின்றன. கத்தோலிக்க திரு அவையில் ஆற்றுப்படுத்தல் பணி குறித்து அகவொளி நிலையத்தின்
வழிகாட்டல்களை ஆய்வுக்குட்படுத்தி சமகாலத்தில் உள ஆற்றுப்படுத்தலின் அவசியத்தை எடுத்துரைத்தலே
இவ் ஆய்வின் நோக்கமாகும். ஆய்வின் கருதுகோளானது அகவொளி நிலையம் மக்களின் வாழ்வில்
ஏற்படும் உளநலம் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்க முறையான வழிகாட்டல்களை முன்வைக்கின்றது
மற்றும் முறையான உளவள ஆற்றுப்படுத்தல் வழிகாட்டலின் பின் மக்களிடையே உளநலம் சார்ந்த
பிரச்சினைகள் ஏற்படுகின்ற விகிதம் குறைவடையும் என்பதாகும். மேலும் உளவள ஆற்றுப்படுத்தல் மற்றும்
அகவொளி நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பாக அறிவதற்கு நூல்களிலிருந்து பெறப்பட்ட தகவல்கள்
ஆய்வுக்குட்படுத்தப்படுவதால் தொகுத்தறிவு முறையியல் இங்கு கையாளப்பட்டுள்ளது. கிறிஸ்தவ உளவள
ஆற்றுப்படுத்தலில் அகவொளி நிலையத்தின் பங்களிப்பு பற்றிய விடயங்களை அகவொளி நிலைய
இயக்குனர் மற்றும் உள ஆற்றுப்படுத்தலினை வழங்கும் வளவாளர்களிடம் நேர்காணல் முறையைக்
கையாண்டு தகவல்கள் பெறப்பட்டதால் இங்கு அவதானிப்பு முறையியலும் கையாளப்பட்டுள்ளது.
இதனூடாக உள ஆற்றுப்படுத்தலில் குடும்பப் பிரச்சினைகள், தனிப்பட்ட பிரச்சினைகள், தற்கொலை
முயற்சிகள், இழப்பின் துயர், கற்றல் இடர்பாடு போன்ற பிரச்சினைகள் அடையாளங்காணப்பட்டன.
அத்தோடு அகவொளி நிலையத்தின் இலவச உள ஆற்றுப்படுத்தல் வழிகாட்டலில் பங்குபற்றி
பயனடைவதில் பலர் அக்கறையற்ற தன்மையோடு செயற்படுகின்றமையும், உளவள ஆற்றுப்படுத்தல்
கருத்துக்கள் குறித்து சஞ்சிகைகள், புத்தகங்கள், பத்திரிகைகள் எழுதும் எழுத்தாளர்கள்
குறைவடைகின்றமையும் ஆய்வின் வழியாகக் கண்டறியப்பட்டது. ஆகவே ஆய்வானது அகவொளி நிலைய
உளவள ஆற்றுப்படுத்தல் வழிகாட்டல்களின் முக்கியத்துவம் மற்றும் அவசியத்தை எடுத்துரைத்து
உளப்பிரச்சினையிலிருந்து மீளும் செயன்முறைக்கு அறைகூவல் விடுக்கிறது. உளவள ஆற்றுப்படுத்தல்
வழிகாட்டல்களில் பங்குபற்றுவதை இடைநிறுத்துதல் மற்றும் உதாசீனம் செய்தல் என்பவற்றை தடுத்து,
அவற்றில் முழுமையாகப் பங்குபற்றி பயனடைந்து உளநலத்துடன் பிறருக்கு எடுத்தக்காட்டான முறையில்
வாழுதல், எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி உள ஆற்றுப்படுத்தல் கருத்துக்கள் குறித்து சஞ்சிகைகள்,
புத்தகங்கள், பத்திரிகைகள் எழுதுதல், குடும்ப வாழ்வை மேம்படுத்தும் கருத்துக்களை அனைவரும் அறிந்து
பயனடையும் வகையில் பிரசித்தி பெற்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புதல். மேலும் நவீன மாற்றங்களுக்கேற்ப இயைபடைந்து தம்மை நேர்மனப்பான்மையோடு நோக்கி, சிறந்த உளநலத்தோடு எதிர்காலச் சந்ததியினர்க்கு ஓர் எடுத்துக்காட்டான நற்பிரசையாக வாழ வேண்டும் என்பதற்கான சில பரிந்துரைகளும் ஆய்வில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.