dc.description.abstract |
கிராம மக்களின் வாழ்க்கைமுறையில் முக்கிய இடம்பெறுகின்ற கடவுள் வழிபாட்டிற்கும் கலைக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. இதுவே கோயிற் கலைகள் தோன்றுவதற்குக் காரணமாயிற்று. இவ்வாறு கோயில்கள் வளர்த்த கலைகளுள் புராணபடனம் வாழ்வியல் விழுமியங்களின் அடிப்படையில் முக்கியமானதாகக் காணப்பட்டது. இப்புராணங்கள் மனிதரை நெறிப்படுத்தி, வழிப்படுத்தும் ஆன்மீக வாழ்வியல் விழுமியங்கள் கொண்ட சைவக் கலாசாரம் ஒன்றினைக் கட்டி எழுப்ப உறுதுணையாக விளங்கின. புராணங்களைப் படித்தல், புராணங்களை வாசித்தல், பயன் சொல்லல் என்பது ஈழநாட்டுக்குக் குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கே உரிய சிறப்பு முறையாகும். ஈழத்திலே புராணங்களைப் படித்துப் பயன் சொல்லும் நிகழ்வானது ஆறுமுகநாவலர் காலத்திலே புராணபடனம் என்ற உயர்நிலையைப் பெற்றது. யாழ்ப்பாணத்தில் புராணபடனம் செய்யப்பட்டு வரும் நூல்களில் கந்தபுராணம் முதன்மையானது. இந்நூல் சைவ மக்களின் சமய கலாசார மறுமலர்ச்சியில் முக்கிய பங்கினை வகித்தது. யாழ்ப்பாண மக்கள் கந்த புராணத்தைத் திருமுறை வரிசையிலேயே வைத்துப் போற்றி வருகின்றனர். இப்புராணபடனம் கோயில்களிலும் பிற இடங்களிலும் காலையிலும் மாலையிலும் நடைபெற்று வந்துள்ளது. இப் புராணபடன முறைகளுக்கு இராகம் தொடர்பான சிறப்பான விதிகள் கூட அமைக்கப்பட்டுள்ளன. இக்கலைகளுக்கு யாழ்ப்பாண சைவ மக்களிடையே இருந்த ஈடுபாடு, தற்போதுள்ள சூழ்நிலை, இக்கலையை அழியவிடாமல் பாதுகாப்பதற்குரிய வழிமுறைகள் ஆகியன இந்த ஆய்வின் மூலம் வெளிக்கொணரப்படுவது இவ்வாய்விற்குரிய நோக்கங்களாகக் கொள்ளப்படுகிறது. ஈழத்திற்கே தனித்துவமான இம்மரபிற்குத் தற்போது மக்களிடையேயுள்ள வரவேற்பு தாழ்ந்தநிலையிலுள்ளமை இவ் ஆய்விற்குரிய பிரச்சினையாகக் குறிப்பிடப்படுகிறது. கோயில் அதிகாரிகளும் ஊர் மக்களும் இணைந்து மேற்கொள்ளும் செயல்வடிவங்கள் மூலம் படித்தோர்களையும் இளையோர்களையும் பெண்களையும் புராணபடனக் கலையில் ஈடுபடுத்தமுடியும் என்பது இதற்குரிய கருதுகோளாக முன்வைக்கப்படுகிறது. நூல்களையும் பத்திரிகைச் செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டு விவரண ஆய்வாக இவ்வாய்வு நகர்த்தப்படுகிறது. எழுதப் படிக்கத் தெரியாத மக்களுக்கும் சமயம் சார்ந்த கதைகளையும் அருள் உபதேசங்களையும் இசைக்கலையுடன் இணைத்து சேர்க்கும் ஓர் ஊடகமாக விளங்கிய இப்புராணபடனக் கலையை மீளுருவாக்கம் செய்வதற்கு இவ்வாய்வு பயனளிக்கும். |
en_US |