Abstract:
இலத்திரனியல் கற்பித்தல் சாதனங்களைப் பயன்படுத்தும் திறனை மேம்படுத்தல் என்ற இவ் ஆய்வில் தேசிய
கல்வியற்கல்லூரி 2 ஆம் வருட நடனத்துறை ஆசிரிய மாணவர்களே ஆய்விற்குட்படுத்தப்பட்டுள்ளனர். கற்பித்தல்
சாதனங்கள் பற்றிய கோட்பாட்டறிவு ஆசிரிய மாணவர்களிடம் எந்தளவு காணப்படுகின்றது, இலத்திரனியல் கற்பித்தல்
உபகரணங்களை கையாளுவதில் மாணவர்கள் எவ்வகையான இடர்களை எதிர்கொள்கின்றனர்? இந்த இடர்பாடுகளை
தீர்த்து முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் யாவை என்பன இவ் ஆய்வு
வினாக்களாக அமைகின்றன. இவ் ஆய்வு ஒரு செயல்நிலை ஆய்வாகும். கற்பித்தல் சாதனங்களை பயன்படுத்தும்
திறன்கள் தொடர்பான கோட்பாடுகளும் எண்ணக்கருக்களும் இவ் ஆய்வில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இவ் ஆய்வு
தொடர்பாக முன்னெழுந்த ஆய்வுகளின் ஆய்வுக்களம், ஆய்வுமாதிரி, ஆய்வுக்கருவி, பகுப்பாய்வு
முறைஎன்பனவற்றிலிருந்து வேறுபட்ட அணுகுமுறையினைக்கொண்டுள்ளது. அத்தோடு இலக்குக் குடித்தொகையாக
யாழ்ப்பாண தேசியக் கல்வியற்கல்லூரி 2 ஆம் வருட நடனத்துறை முகிழ்நிலை ஆசிரிய மாணவர்கள் பத்துப்பேர்
உள்ளடக்கப்படுகின்றனர். தரவுகள் சேகரிப்பதற்காகச் செயன்முறைத்திறன் சோதனை வினாக்கொத்து, அவதானிப்பு,
கலந்துரையாடல் போன்ற தரவு சேகரிப்பு நுட்பங்களும் தரவுப்பகுப்பாய்வில் நூற்றுவீதம் வரைபுகள் மூலமான ஒப்பீடு,
தரவு அளவுச்சட்டம் என்பனவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ் ஆய்வை மேற்கொண்டதன் கண்டறிதல்களாக புதிய
மாற்றங்கள் தொழில்நுட்பம் பற்றிய அறிவு குறைவாக உள்ளமை, நடனபாட செயன்முறை அலகுகளிற்கு
இலத்திரனியல் உபகரணங்களை பயன்படும் நாட்டம் இன்மைக்கு ஆசிரியர் கற்பித்தல் சாதனங்களைப் பயன்படுத்திக்
கற்காமையும் காரணியாக இருந்துள்ளது. இவ் ஆய்வின் பேறுகளாக எதிர்கால ஆய்வாளர்களுக்கான விதப்புரைகள்
முன்வைக்கப்பட்டுள்ளன. இவ் ஆய்வுக்காலத்தில் ஆய்வாளர் தனது கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை
மேற்கொள்ளவேண்டியிருந்தமை, பாடவேளை நேரம் தவிர்ந்த ஏனைய வேளைகளில் ஆய்வு தொடர்பாக ஆசிரிய
மாணவர்களிடம் ஒத்துழைப்பு காணப்படாமை, கற்பித்தல் சாதனங்களின் OHP மற்றும் கணணி மட்டும் பயன்படுத்தல்
என்பன இவ் ஆய்வின் பிரதான மட்டுப்பாடுகளாக அமைந்திருந்தன. எனினும் இத் துறை தொடர்பான விரிவான
ஆய்வுகள் மாணவர்களின் உயர்விற்கு உதவும் என இவ் ஆய்வு உணர்த்தியுள்ளது.