Abstract:
ஆலயங்கள் கலைகளின் நிறைவடிவமாகும். ஆலயங்கள் வாயிலாக்க் கலை வடிவங்கள் பண்டைய
காலம் தொட்டு இன்றுவரை வளர்ந்து வருகின்றன. கலைகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில்
இறைவனுடன் தொடர்புபடுகின்றன. ஆலய வழிபாட்டு முறைகளில் சமயம் மற்றும் தத்துவம்,
கலைகள் எனும் மூன்றும் இழையோடி உள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். இக் கலைகள் தெய்வீக
அம்சம் நிறைந்து காணப்படுகின்றன. கலைகள் ஒவ்வொன்றும் ஆலயங்களினூடாக
வெளிப்படுத்தப்படுகின்றன. ஒரு மனிதனின் அனைத்து உறுப்புக்களின் செயற்பாடுகளும்
ஆற்றுகைக்கலைகளில் ஒன்றான நடனக்கலையில் காணப்படுகின்றன. இந் நடனக்கலை
உலகெங்கிலும் உள்ள இந்து ஆலய வழிபாட்டில் நடைபெற்றுவருவது கண்கூடு. அந்த வகையில்
தற்காலத்தில் ஆலய வழிபாட்டு முறைகளில் நடனக்கலை வெளிப்படுத்தப்படும் வகையினை
நோக்குவதாகவே இவ் ஆய்வு அமைகின்றது. இந் நடன ஆற்றுகைகள் ஆலயங்களில் சாஸ்திர
ஒழுங்கு முறைகளுக்கு ஏற்ப ஆற்றுகைப்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்டறிதலே இவ்
ஆய்வுக்குரிய பிரச்சினையாக முன்வைக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களை
ஆய்வெல்லையாகக்கொண்டு இவ் ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது. இவ் ஆய்வில்
ஆலயங்களில் இடம்பெறும் நடனங்களைக் கண்டறியவும் அந் நடனங்கள் நிகழும்
சந்தர்ப்பங்களை வெளிக்கொணரவும் மற்றும் யாழ்ப்பணத்தில் எவ்வெவ் ஆலயங்களில்
நடனங்கள் நிகழ்கின்றன என்பதை அறிய கள ஆய்வு, விபரண ஆய்வு மற்றும் பகுப்பாய்வு
போன்றவை ஆய்வு முறையியல்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆலயங்களில் நடைபெறும்
இந் நடனங்கள் சாஸ்திர நூல்களுக்கமைவாக வெளிப்படுத்தப்படுகின்றனவா என்பதைக்
கண்டறிவதும், நடனங்கள் ஆலயங்களில் எச் சந்தர்ப்பங்களில் நடைபெறுகின்றனஎன்பதையும்
அறிவதில் இவ் ஆய்வு கவனம் செலுத்துகின்றது. இதற்கு மூலங்களாக நாட்டிய சாஸ்திரம்,
காமிகாகமம் முதலான நூல்கள் துணைபுரிகின்றன. இவ் ஆய்வு ஆலயங்களில் நடனங்கள்
முன்னைய காலங்களில் நடந்தன என்பதை சான்றுகளுடன் வெளிப்படுத்துவதாகவும், நடனம்
ஆலயங்களில் நடைபெறாத பட்சத்தில் அவற்றை மீண்டும் நடைமுறைப்படுத்தும் வகையினை
வெளிப்படுத்துவதாகவும் அமைகின்றது. சாஸ்திரிய நடனம் சார்ந்த மரபுகளும் கிராமிய ஆடல்
சார்ந்த மரபுகளும் ஆற்றுகைப்படுத்தப்படும் தன்மையினைக் கண்டறிந்து வெளிக்கொணரும்
ஆய்வாகவும் காணப்படுகின்றது.