dc.description.abstract |
கலைவெளிப்பாடுகள் அவை உருவாக்கப்படும் சூழலுக்கு ஏற்ப அக்காலத்து சமூகப் பண்புகளையும் மக்கள்
வாழ்வியலையும் வெளிப்படுத்தக்கூடியவையாகக் காணப்படுகின்றன. எத்தகைய கலைப்படைப்பும்
மக்களின் உள நிலையிலிருந்தே தோற்றம்பெறும். அந்த உள நிலையானது சமூகத்தின் இருப்பிலிருந்து
மேலெழுகின்றது எனும் மார்க்சிச உளவியலாளர்களின் கருத்தின்படி ஒரு சமூகத்தின் பண்பாடு சார்ந்த
வெளிப்பாட்டுத்தன்மையில் அக்கால சிற்பங்கள் முக்கியம் பெறுகின்றன. அந்த வகையில் யாழ்ப்பாணத்து
மரச்சிற்பங்களின் கலைவெளிப்பாடுகள் அச் சமூகத்தின் பண்பாட்டு ரீதியான வெளிப்பாட்டு மூலகம் ஆகும்.
யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலிப்பிரதேசத்தில் மரத்தினை ஊடகமாகக் கொண்டு கம்மாளர் அல்லது
விஸ்வகுலம் எனும் மக்கள் தொகுதியினரால் குருசீட மற்றும் பரம்பரை முறைவழியாக தமக்கான
சடங்குகள், சமய நெறிமுறைகளைப் பின்பற்றி மரச்செதுக்கல் சிற்ப வேலைப்பாடுகளை உருவாக்கி
வருகின்றனர்.சிற்ப சாஸ்திர அளவுகள் மூலம் கலைப்படைப்புக்களை உருவாக்குதல் என்பது இவர்களது
கலைப்படைப்பின் அடிப்படை அம்சங்களாகும். இன்றைய காலகட்டத்தில் யாழ்ப்பாணத்திலும் நவீன சமூக
மயமாக்கலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகின்றது. யாழ்ப்பாண மரபுசார்ந்த வெளிப்பாடுகளில்
அழகியல் நுணுக்கங்களை எதிர்கால சந்த்தியினருக்கு வழங்குவதிலுள்ள இருப்பு நிலை என்பது இன்றைய
காலகட்டத்தில் கேள்விக்குரியதாகியுள்ளது. ஆக்கமற்ற ரீதியிலான அபிவிருத்திச்செயற்பாடுகள்,
முறையற்ற பாதுகாப்பு முறைகள், பொருளாதார முன்னேற்றம், நவீன மயமாக்கல், மக்களின்
கலைவெளிப்பாடுகள் மீதான அசட்டுத்தனமான மனநிலை மற்றும் அண்மைக்காலமாக நடைபெற்ற
உள்நாட்டுப்போர் போன்ற செயற்பாடுகளின் காரணமாக சமூகப்பண்பாட்டு வரலாற்று முக்கித்துவம்
வாய்ந்த பல படைப்புக்கள் அழிவடைந்து விட்டன. இவற்றில் சிற்பங்கள் முக்கியம் பெறுகின்றன.
யாழ்ப்பாணத்து சிற்பங்களில் மரச் சிற்ப வேலைப்பாடுகள் முக்கியமானவை. அண்மைக்காலத்தில் புதிய
சிற்ப ஊடகங்களின் பாவனையும், நவீன கண்டுபிடிப்புக்களும் புதிய இயந்திரங்களின் வருகையின்
தாக்கங்களும் இப் பாரம்பரிய சிற்ப வேலைப்பாடுகளில் ஊடுருவுகின்றன. இதனால் பாரம்பரிய
மரச்செதுக்கல் வேலைப்பாடுகளின் அழகியல் தன்மை மழுங்கடிக்கப்பட்டுள்ளது என்பதே
ஆய்வுப்பிரச்சினையாக கொள்ளப்படுகின்றது. திருநெல்வேலிப்பிரதேச பாரம்பரிய மரச்செதுக்கல்
வேலைப்பாடுகளின் அழகியல் மற்றும் நுணுக்கங்களைக் கண்டறிதலும், நவீன இயந்திரங்களின் மூலமாக
உருவாக்கப்படும் சிற்பங்களும் – பார்பரிய சிற்பக்கலைப்படைப்புக்களுக்கும் இடையிலான அழகியல்
ரீதியான வேறுபாடுகளைத்தொகுத்தலும் இவ் ஆய்வின் நோக்கங்களாகும். யாழ்ப்பாணத்து மரச்சிற்ப
அழகியலில் நவீன இயந்திரங்கள் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன எனும் ஆய்வினுடைய
கருதுகோளினடிப்படையில் 2000 ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியைக் கால
எல்லையாகக் கொண்ட இவ் ஆய்வானது கள ஆய்வு மற்றும் பண்பு சார்ந்த ஆய்வு முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. |
en_US |