Abstract:
மனிதன் இயற்கையின் ஓர் அலகு. இயற்கை, அழகியலம்சங்களின் கூட்டிணைவால் ஆனது. எனவே மனிதனும் அழகியல் அலகுகளின் அதிகாரங்களுக்குட்பட்டவனாகின்றான். அதே வேளையில் தனியன்களது கூட்டமைவே சமூகம் அல்லது இனம். இந்த வகையிலே இனத்தின் அல்லது சமூகத்தின் கூட்டமைவிலே அழகியல் முக்கியம் பெறுவது தவிர்க்க முடியாததாகின்றது. ஆழகியல் மனிதனை மானுடத்துவத்தோடு ஒன்று சேர்த்து முழு மனிதனாக்குகின்றது. இந் நிலையிலே சமூகப்பண்பாட்டுக் கூறுகளுள் இசை ஒரு பிரதான இடத்தைப் பெறுகின்றது.
உலகப் பண்பாட்டியல் நிலைகளிலே வாழ்கின்ற இனக்குழுமங்கள் ஒவ்வொன்றும் தமக்குரிய மரபுகள் விழுமியங்களுக்கு ஏற்ப தமது இசைமரபுகளை வடிவமைத்துக்கொள்கின்றன. ஓவ்வொரு இசைமரபும் தாம் வாழும் சமூகவியல் பண்பாட்டியல் விழுமியங்களின் நெறிமுறைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுகின்றன.
சர்வதேச மரபாக இசையானது சமூக வழக்கிலிருப்பினும் ஈழத்தில் தமிழ் சமூகத்தின் மத்தியில் இதன் இருப்பு என்ன, காலத்துக்குக்காலம் இந்த சமூகழுலக்கூறாகவிளங்கும் இசையானது எவ்வாறு தமிழினத்தை அடையாளப்படுத்தி நிற்கின்றது, தமிழ் சமூகத்திலே இந்த மூலக்கூறு பெற்றுக்கொண்டுள்ள இடம் என்பவை பற்றிக் கண்டறிவதாகவே இந்த ஆய்வுக்கட்டுரை அமைகின்றது.