Abstract:
இசைக்கும் இறையியலுக்கும் மிக ஆழமான உறவுண்டு. எல்லா சமயங்களும் இசையினால் இறைவனைப் போற்றினாலும் இந்து சமயம் இறைவனை இசைவடிவினனாகக் காண்கின்றது. இசைக்கான உற்பத்தி மூலமாக இறைவனைக் காண்கின்றது. இந்து சமயத்திலே இறைவடிவங்கள் ஒவ்வொன்றும் ஏதொவொரு இசைக்குறியீட்டோடு இணைந்திருப்பது இந்து சமயத்துக்கும் இசைக்குமுள்ள உறவின் சிறப்புக்கான எடுத்துக்காட்டாகும்.
இந்த வகையிலே இந்து சமய வழிபாட்டு முறைகளுள் நவக்ரஹ வழிபாடு முக்கியமானதொன்றாகக் கருதப்படுகின்றது. காலந்தோறும் இந்து சமயத்திலே ஏற்பட்ட பரிமாணத்தின் பேறாக அல்லது சமய சித்தாந்தப் பேருண்மையின் தெளிவாக, அல்லது வாழ்வியல் தத்துவங்களின் மறைபொருளின் வெளிப்பாடாக இந்த நவக்ரஹ வழிபாட்டை எடுத்துக்கொள்ளலாம். இந்த அடிப்படையிலே உப தெய்வங்களாகக் கொள்ளக்கூடிய நவக்ரஹங்களுக்கான வழிபாட்டுக்கும் இசைக்குமுள்ள உறவுநிலை பற்றிய ஒரு பார்வையினை முன்வைப்பதாக இவ்வாய்வுக்கட்டுரை நகர்த்திச் செல்லப்படுகின்றது.
இந்து சமயத்தின் வாழ்வியல் நம்பிக்கைகளான தோசங்களும் அதற்கான நிவர்த்திகளுக்குமாக இந்த நவக்ரஹ வழிபாடு முதன்மைப்படுத்தப்படுகின்றது என்பது பொதுவான, இந்துக்களின் எடுகோளாக இருக்கின்றது. கிரங்களின் நிலைகள், அவற்றினால் ஏற்படுகின்ற தோசங்கள், அதற்கான மாற்றீடுகள் என்பன இவ்விறை வழிபாட்டிலே முதன்மைப்படுத்தப்படுகின்றது. இந்த நவக்ரஹங்களின் வழிபாட்டுக்குரிய பதிகங்களாக திருஞானசம்பந்தமூர்த்திநாயனாரது இரண்டாம் திருமுறைக்கட்டமைப்பிலே வைத்தெண்ணப்படும் கோளறுபதிகம் முதன்மைப்படுத்தப்படுகின்றது.
இந்த நிலையிலே, கிபி 14ம் நூற்றாண்டுகளுக்குப் பின் பிரசித்தம் பெற்ற கர்நாடக சங்கீத மரபிலும் இந்த நவக்ரஹங்கள் முதன்மைப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டுகொள்ள முடிகின்றது. குறிப்பாக, கிபி 16ம் நூற்றாண்டுகளிலே வாழ்ந்த சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவராக வைத்தெண்ணப்படும் முத்துஸ்வாமி தீக்ஷpதருடைய கிருதிகளிலே மிகச்சிறப்பாகக் கண்டுகொள்ளமுடிகின்றது.