Abstract:
ஈழமும் தமிழகமும் ஒத்த பண்பியல்புகளைக் கொண்ட சமூகங்கள் வாழ்கின்ற நாடு. ஒருகாலத்திலே இரு பிரதேசங்களும் இணைந்திருந்ததாகவும் பிற்பட்டகாலங்களிலே ஏற்பட்ட கடல்கோள்கள் இவ்விரு நிலப்பரப்புக்களைப்பிரித்தன என்பதும் வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்ற கருத்து. ஆயினும் ஒத்த பண்பாட்டைப்பின்பற்றுகின்ற சமூகங்கள் அருகருகே வாழ்வதால் பிரதேசங்கள் வேறாக இருந்தாலும் வழக்கிலிருக்கின்ற மொழி, பண்பாடு,, கலை கலாசார விழுமியங்கள் அனைத்திலும் ஒத்த இயல்புகள் இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம். இவ்வாறான ஒப்புமைக்குப் பல காரணங்கள் உண்டு. இருதேசங்களின் புவியியல் அமைவிடம், வாழுகின்ற சமூகங்களுக்கிடையிலான ஒப்புமை, இதன்காரணமாகக் காலந்தோறும் இரு பிரதேசங்களுக்குமிடையிலான கலாசாரப் பரிமாற்றங்கள் என்பன முதன்மையாகக் காணப்படுகின்றன. இந்த நிலையிலே தமிழகத்திலே ஊற்றாகி அண்டம் நிறைந்து வளர்ந்து நிற்கின்ற கலைகள் ஈழத்திலும், குறிப்பாக தமிழ்பேசும் சமூகம் செறிந்து வாழுகின்ற யாழ்ப்பாணத்திலும் ஆழமாகக் காலூன்றியது வியப்புக்குரிய விடயமல்ல.
தமிழத்திலே வளர்ந்த இசைக்கலை அதேகாலப்பரப்பிலே ஈழத்திலும் அதே பரிமாணங்களோடு வழக்கிலிருந்திருக்கின்றது.
இந்த பின்னணியிலே ஈழத்தின் இசை மற்றும் நடனக்கலை மரபிலே கீர்த்தனைவடிவம் பெற்றிருந்த இடம் பற்றி ஆராய்வதாக இந்த ஆய்வுக்கட்டுரை எழுதப்படுகின்றது.
தமிழகத்திலே கீர்த்தனைமரபின் காத்திரமான வியாபகத்தினை சங்கீத மும்மூர்த்திகள் காலத்திலிருந்தே பார்க்கமுடிகின்றது. கீர்த்தனை வடிவத்தை செழுமைப்படுத்தி பிரபலப்படுத்திய பெருமை சற்குரு ஸ்ரீ தியாகராஜரையே சாரும். இந்த நிலையிலே இதே காலத்திலே ஈழத்திலும் கீர்த்தனைகள் யாக்கப்பட்டிருக்கின்றன. அதே காலத்திலே வாழ்ந்த ஈழத்து தமிழ்ப்புலவர்கள் பலர் கீர்த்தனைகள் பலவற்றை அமைத்திருக்கின்றார்கள் எ;னறு வரலாற்றுப்பதிவுகள் குறிப்பிடுகின்றன. இப்பதிவிலிருந்து தமிழகத்திலும், ஈழத்திலும் சமகாலத்திலே இசைக்கலை சார் வளர்ச்சிகளும் மாற்றங்களும் ஒரே போக்கிலே வளர்ச்சிபெற்றிருந்தன என்கின்ற முடிவுக்கு வரமுடிகின்றது.
ஆனால் தமிழக்கத்திலே கீர்த்தனைகள், இறை துதியாகப்பாடப்பட, ஈழத்திலே இறைதுதியாகவும், சமூகத்தை வழிப்படுத்தும் கருவியாகவும் திகழ்ந்திருக்கின்றது என்பது மிகவும் முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டிய விடயமாகக் கொள்ளலாம்.
இந்த நிலையிலே ஈழத்திலே கீர்த்தனைகளின் தோற்றம், வியாபகம், இசை மற்றும் நடனத்துறைகளிலே ஈழத்துக் கீர்த்தனைகளின் வகிபாகம் போன்றவை பற்றி இங்கு விபரமாக நோக்கப்படுகின்றது.
இந்தவகையிலே மேற்படி ஆய்விற்கான தரவுகளாக ஈழத்திலே எழுதப்பட்ட கீர்த்தனைகள் தெரிவுசெய்யப்படுகின்றன. ஆயினும் கடந்தகாலங்களிலே ஏற்பட்ட தவிர்க்கமுடியாத அசாதாரண சூழல்களாலும் அழிந்தவை, அழிக்கப்பட்டவை போக எஞ்சியிருக்கின்ற, எமக்குக்கிடைக்கக்கூடிய புலவர்களின் படைப்புக்கள் மாத்திரமே இங்கு ஆய்வுத்தளங்களாகக் கொள்ளப்படுகின்றன.
மேலும் கிடைக்கப்பெற்ற கீர்த்தனைகளது எழுத்துருக்கள், ஈழத்துக்கீர்த்தனைகளது ஒலிப்பதிவுகள், நூல்கள், ஒலித்தட்:டுக்கள் என்பன தகவல் தரும் மூலங்களாகக் கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு திரட்டப்பட்ட தகவல்களினடியான ஒரு இசையியல் சார் வரலாற்றாய்வாகவே இவ்வாய்வுக்கட்டுரை நகர்த்தப்படுகின்றது.
இவ்வாய்வானது ஈழத்துக்கீர்த்தனைகள் பற்றிய பதிவுகளாயிருக்கின்ற அதே சமயம் காலந்தோறும் ஈழத்து இசை மரபிலே கீர்த்தனைகள் பெற்ற மாற்றங்களையும், இசையியல் மற்றும் நடன மரபுகளிலே கீர்த்தனைகள் பெற்றுக்கொண்ட வகிபங்கு பற்றியும் வெளிப்படுத்துவதாக அமையும். மேலும் இவ்வாய்வானது ஈழத்து இசை மற்றும் நடனத்துறைசார்ந்த ஆய்வுகளுக்கான வாசிப்பு நூலாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.