dc.description.abstract |
இசை என்பது ஒரு அற்புதமான கலை. இறைவனால் மானிடர்க்கு அளிக்கப்பட்ட மகோன்னதமான பரிசு.
கலைகள் சமூகத்தின் தனித்துவம் காக்கும் மூலகங்கள். எந்தக்கலையும் தான்வாழுகின்ற சமூகத்தின் இரத்த நாளங்கள் போலவே செயல்படுகின்றன. இவற்றுள் குறிப்பாக கிராமியக்கலைகள், தான் வாழுகின்ற பண்பாட்டின் முத்திரைகளாக விளங்குகின்றன என்றால் மிகையாகாது.
'ஒரு இனத்தின் அல்லது நாட்டின் பண்பாட்டை, பழக்கவழக்கங்களை, வரலாற்றை, நாட்டுநடப்பை, உண்மையான முறையிலே படம் பிடித்துக்காட்டுவனவே நாட்டுப்புறவியலாகும். மனித சமுதாயம் எதை அனுபவித்ததோ, எதைக் கற்றதோ, எதைப் பயிற்சி பெற்றதோ இவற்றைக் குவித்து வைத்திருக்கும் சேமிப்பு அறையே இது' என்று நாட்டுப்புறவியலாய்வாளர்கள் கருதுகின்றனர்.1 கிராமியக்கலை வடிவங்களிலே முக்கிய இடம் பெறுவது கிராமியப் பாடல்கள். நாட்டுப்புறக்கலைகள் எந்த மண்ணில் தோற்றம் பெறுகின்றனவோ அந்த மண்ணின் மணம், தன்மை, பேச்சு, மொழி போன்றவற்றின் பிரதிகளாக விளங்குகின்றன. மேலும் மக்கள் பயன்படுத்துகின்ற சொற்றொடர்களும் பதப்பயன்பாட்டு வழக்கங்களும் இவற்றில் பயின்று வரும். மேலும் வரலாற்றுப் பண்பாட்டுச் செய்திகளைக் கூறுவதுடன் உண்மை நிலையைத் தெளிவாக்கும் பண்பு கொண்டது.
இந்தக்கிராமிய இசை வடிவங்களில் குறிப்பிடப்படுகின்ற விடயங்கள் யாவும் மானிடவியல், சமூகவியல், மொழியியல் போன்றவற்றின் வேர்களை இனங்கண்டு கொள்ள முடிகின்றது. அதிலும் குறிப்பாக நாட்டுப்புறப்பாடல்வகைகளில் குறிப்பாக தாலாட்டு மற்றும் ஒப்பாரி ஆகிய இரண்டு பாடல் வகைகளும் பெண்களை மையமாகக் கொண்டு அமையப்பெற்றது.
பெண்களை மையப்படுத்தி குடும்பத்தின் நிலைபேற்றிற்காக உழைப்பவர்களது உள்ளக்கிடக்கைகளின் வடிகாலாக இப்பாடல் வகைகள் வழக்கிலிருந்திருக்கின்றன என்றால் மிகையாகாது.
ஆனால் சமகாலத்திலே கிராமிய இலக்கியத்தளங்கள் வெறுமனே ஆய்வுப்பொருளாகிப்போய்விட்டநிலையிலே சமூகத்தின் கண்ணாடிகளாக இருந்து, இன்று வாழ்வியல் ஓட்டத்திலே மறக்கடிக்கப்பட்டுவிட்ட இந்த கிராமியக்கலைவடிவங்களை குறிப்பாக கிராமியப்பாடல் வகைகளின் சமூக இருப்பின் முக்கியத்துவத்தினை எடுத்தாராய்வதாக இக்கட்டுரை முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த வகையிலே சமகால ஓட்டத்தினுள் தமிழ்சமூகத்தின் தனித்துவ அடையாளங்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கான முயற்சிகள் பல ஆங்காங்கே தமிழ்ப்பற்றாளர்களாலும் கற்றறிந்த சான்றோர்களாலும் முன்னெடுப்புக்கப்பட்டு வருகின்ற இந்நிலையிலே இசை வழியாக தமிழ் மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடானது எதிர்கொள்கின்ற சவால்களை எவ்வாறு சாதனைகளாக்க முடியும் என்று இந்தக்கட்டுரை நோக்குவதாக அமைகின்றது. |
en_US |