Abstract:
இசை என்பது ஒரு அற்புதமான கலை. இறைவனால் மானிடர்க்கு அளிக்கப்பட்ட மகோன்னதமான பரிசு.
'ஆஹா! உந்தன் அதிசயங்கள் தன்னுள்ளே கானாமுதம் படைத்த காட்சி மிக விந்தையடா!' என்று இசை பற்றித் தன்னுடைய குயிற்பாட்டிலே அதிசயித்துப் பாடுகின்றார் புரட்சிக்கவி பாரதியார்.
'ஒரு இனத்தின் அல்லது நாட்டின் பண்பாட்டை, பழக்கவழக்கங்களை, வரலாற்றை, நாட்டுநடப்பை, உண்மையான முறையிலே படம் பிடித்துக்காட்டுவனவே நாட்டுப்புறவியலாகும். மனித சமுதாயம் எதை அனுபவித்ததோ, எதைக் கற்றதோ, எதைப் பயிற்சி பெற்றதோ இவற்றைக் குவித்து வைத்திருக்கும் சேமிப்பு அறையே இது' என்று நாட்டுப்புறவியலாய்வாளர்கள் கருதுகின்றனர். நாட்டுப்புயவியலிலே முக்கிய இடம் பெறுவது நாட்டார் பாடல்களே. கலை மூலக்கூறுகள் யாவுமே உலகப்பண்பாடுகள் அனைத்துக்கும் பொதுவானவை. இவற்றின் வெளிப்படு தள நிலைகள் பண்பாடுப் பின்புலங்களுக்கேற்ப மாறுபட்டிருப்பினும் அடிப்படையின் சாரம் ஒன்றே.
பூர்விககாலம் தொட்டு இன்றுவரை வளர்ச்சி பெற்று வந்துள்ள இசைபற்றியும் அதன் வரலாற்றுப்பின்னணி பற்றியும் ஆராய்ந்த இனக்குழும இசையியலாளர்கள், மானுடத்தின் பண்பாட்டு வளர்ச்சி நிலைகளுக்கேற்ப இசைக்கலையினையும் பூர்வீக இசை, நாட்டார் இசை, சாஸ்திரிய இசை என மூன்று வகையாக வகுத்துள்ளனர்.
பூர்வீக இசை காலத்தால் முற்பட்ட, படிப்பறிவற்ற, எழுதத்தெரியாத பழங்குடி சமூகத்தில் வழங்கி வந்த இசைமரபாகும். சாதாரண சமூகத்தின் மத்தியிலே அவர்களது அனுபவ வெளிப்பாடுகளாக வெளிவருகின்ற எழுதாக்கவிகள் நாட்டார் இசைமரபு எனவும், ஒழுங்குபடுத்தப்பட்ட மரபுக்குள் நின்று குரு சிஸ்ய முறையிலே முறையாகக் கற்றுப்பாடப்படுவது சாஸ்த்திரிய இசை மரபு என்றும் கொள்ளப்படும்.
நாட்டார்பாடல்கள் ஒவ்வொரு சமூகத்திலும் ஒரு தனித்துவமான மரபாக இருந்து வருகின்றன. பொதுவாக நாட்டார் பாடல்களின் பயன்பாட்டை அடிப்படையாகக்கொண்டு பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. தாலாட்டுப்பாடல்கள்
2. சிறுவர் விளையாட்டுப்பால்கள்
3. தொழிற்பாடல்கள்
4. காதல் பாடல்கள்
5. வழிபாட்டுப்பாடல்கள்
6. கதை - கூத்துப்பாடல்கள்
7. ஒப்பாரிப்பாடல்கள்
மேற்குறிப்பிட்டுள்ள ஒழுங்கு முறையின்படி இவ்வேழுவகைப்பாடல்களும் மக்களது பிறப்பு முதல் இறப்பு வரையும் தொடர்ச்சியாக வருவன. இந்த வகையிலே குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சியைத் தீர்மானிக்கின்ற சிறுவர் பருவத்திலே இந்த நாட்டார் பாடல்கள் எத்துணை இடம் வகிக்கின்றன என்பதனை ஆராய்ந்து வெளிப்படுத்துவதே இவ்வாய்வுக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது. இந்தப்பாடல்கள் சிறுவர்களது ஆளுமை வளர்ச்சியிலே எத்துணை தூரம் பங்குவகிக்கின்றது என்பதனையும் இக்கட்டுரையிலே நோக்கமுடிகின்றது.