dc.description.abstract |
கிறிஸ்தவ வரலாற்றில் முதல் மூன்று நூற்றாண்டுகள் உரோமையர்களின்
கட்டுப்பாட்டில் பல இன்னல்களை எதிர்கொண்ட கிறிஸ்தவர்கள், தங்களது சமயச்
செயற்பாடுகளை வெளியரங்குகளில் நிகழ்த்த முடியாத நிலையில் இருந்துள்ளனர். சமய
வழிபாட்டு மையங்களாக நிலச்சுரங்கத்து கல்லறைகள், வசதிப்படைத்த கிறிஸ்தவர்களின்
இல்லங்கள் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும் அவர்கள் மறைசார்ந்த
கருத்துக்களை வெளிப்படுத்தக் குறியீட்டு ஓவிய வடிவங்களையே கையாண்டுள்ளனர்.
இவ்வாறான செயற்பாடு அவர்களிடையே இரகசிய ஆளிடைத் தொடர்பை ஏற்படுத்த
உதவியாக அமைந்துள்ளது. குறிப்பாக மீனைக் குறிக்கும் கிரேக்க எழுத்தும் அடையாளமும்,
கப்பல், நங்கூரம், மயில், புறா, கிரேக்க எழுத்துக்களின் இணைவுகள் என இன்னும் பல
குறியீட்டு ஓவியங்களை எடுத்துரைக்கலாம். இவ்வாறான குறியீட்டு ஓவியங்கள், இன்றும்
கிறிஸ்தவ ஆலயங்களில் காணப்படுகின்றனவா? என்னும் வினாவானது இந்த ஆய்வினை
மேற்கொள்ள வித்திட்டுள்ளது. ஆய்வின் வரையறையைக் கருத்திற் கொண்டு இலங்கையில்
யாழ். மறைக்கோட்டத்துக் கத்தோலிக்க ஆலயங்களை மையப்படுத்தியதாக ஆய்வு
அமையப்பெற்றுள்ளது. ஆய்வில் குறியீட்டு ஓவிய வடிவங்கள், தொடக்கக் கிறிஸ்தவர்களின்
வாழ்வுப் பின்னணி என்பவற்றை அறிய நூல்கள், சஞ்சிகைகள் என்பவற்றிலிருந்து
பெறப்பட்ட தரவுகள் தொகுத்தறிவு முறையிலும், இன்றைய கத்தோலிக்கத் திரு அவையில்
பயன்படுத்தப்படும் குறியீட்டு ஓவியங்களைப் பற்றி அறிவதற்குக் கள அவதானிப்பு முறையும்
கையாளப்பட்டுள்ளன. ஆய்வானது குறிப்பிட்ட சின்னங்கள் ஆலயங்களில்
காணப்படுகின்றனவா? என்பதை அடையாளம் காண்பதாக மட்டும் அமைந்ததால்
நேர்காணல் இங்குப் பயன்படுத்தப்படவில்லை. தொடர்ந்து குறியீட்டு ஓவியங்கள்
கத்தோலிக்க திரு அவையில் எவ்வாறான இடங்களில் பயன்பாட்டில் காணப்படுகின்றன,
அவற்றின் பயன்பாடு, அவை பெறும் மறைசார்ந்த விளக்கங்கள் என்பன இன்றைய
கத்தோலிக்க சமூகம் அறிந்து இருத்தல் வேண்டுமா? என்னும் விடயங்கள் பகுப்பாய்விற்கு
உட்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி தொடக்கக் கிறிஸ்தவர்களிடையே காணப்பட்ட குறியீட்டு
ஓவியங்கள் இன்றும் பயன்பாட்டிலிருந்தாலும் அவை சில மாறுதலுடன் கத்தோலிக்க
ஆலயங்களில் காணப்படுகின்றன என்னும் விடயம் ஆய்வில் அடையாளம்
காணப்பட்டுள்ளது. குறியீட்டு ஓவிய வடிவங்கள் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களிடையே
காணப்பட்டாலும் அவற்றின் பயன்பாடு எடுத்துரைக்கப்படுதல் வேண்டும். ஆய்வானது
குறியீட்டு ஓவிய அடையாங்கள் ஆன்மீகப் பிரதிபலிப்பு மட்டுமே, இறைவனுக்கு நிகரானது
அல்ல என்னும் தெளிவை வழங்குகின்றது. மேலும் தொடக்கக் கிறிஸ்தவ பின்னணியில்
அழிவுறும் நிலையிலிருந்த கிறிஸ்தவத்தைக் கட்டியெழுப்ப பயன்பட்ட குறியீட்டு
ஓவியங்களிள் பொருள் வரலாற்று ரீதியாக அடையாளங்களாகப் பதிவுசெய்யப்பட அவை
பற்றிய அறிவும், விழிப்புணர்வும் இன்றைய கத்தோலிக்கச் சமூகத்துக்கும் அவசியம் என்பதை
எடுத்துரைக்கின்றது. |
en_US |