Abstract:
மனித அறிவின் ஒருமித்த தேடலை விஞ்ஞானம் - ஆன்மீகம் என்று இருமைவாதச் சிந்தனைகள் பிளவு படுத்தின. விஞ்ஞானம் அனைத்தையும் புறவயநிலையில், பரிசோதனை முறைகள் மூலமாக ஆய்வு செய்வது. ஆன்மீகமானது விஞ்ஞானம் தன் ஆய்வுக்குட்படுத்தும் அனைத்தையும்> ஆழ்நிலை உணரல் (transcendental), பண்புநிலை (qualitative) ஆகிய முறைகளில் நோக்குவது. விஞ்ஞானம், ஆன்மீகம் ஆகியன இரண்டும் முற்றிலும் வேறுபட்ட எல்லைகளுக்குட்பட்டதாக அவைகளின் சாராம்சங்கள் வெளிப்படுத்தினாலும் அவைகளுக்கிடையில் தொடர்புகள், இடைவினைகள் இருப்பதுவும் கண்கூடு. மனித நாகரிக வரலாற்றின் ஆரம்பங்களில் சமய - ஆன்மீக வாதிகளும், ஞானிகளும், முனிவர்களுமே மருத்துவர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் அறிவியல் மேதைகளாகவும் இருந்தனர். இவ்வாறாக விஞ்ஞான - ஆன்மீக நிலைகளின் இன்றிமையாத் தொடர்புகள், இடைவினைகள் ஆகியனவற்றைச் சமகாலச் செல்நெறிகளின் அடிப்படையிலும், அவற்றின் பிளவு பட்ட தன்மைகளினால் எழுந்த எதிர்வினைகளின் பின்னணியிலும் ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலமாக ஓர் ஒருங்கிணைந்த மானுடத்தை உருவாக்குவதற்கான அடிப்படைகளைத் தேடமுடியும். இத்தேடலை அடிப்படையாகக் கொண்டதாகவே இவ் ஆய்வு அமைகிறது. இதனடிப்படையில் விஞ்ஞானமும், ஆன்மீகமும் ஒன்றையொன்று முரண்படுத்துபவையல்ல. மாறாக ஒன்றையொன்று நிறைவு செய்து ஒன்று மற்றையதைப் புரிந்து கொள்ள வழிவகுப்பவை என்ற அடிப்படைப் புரிதல் ஏற்படும். விஞ்ஞான - ஆன்மீகப் பிளவுநிலை நவீனத்துவத்தின் பின்னணியில் மேலைத்தேயத்திலேயே அதிகம் உணரப்பட்டது. தனது மத்தியகால மேலாண்மை நிலையில், கிறிஸ்தவம் கடவுள் மையச் சிந்தனைகளைத் திணித்து, ஏனைய சுயாதீன அறிவியல் சிந்தனைகளைத் தடை செய்தமையின் பின்விளைவாகவே விஞ்ஞானத்துவம் (scientism), உலகமயமாதல் (secularization) போன்றன தோன்றின. இப்பின்னணியிலே விஞ்ஞான - ஆன்மீக இடைவினைகள் பற்றிய இவ் ஆய்வு ஒரு கிறிஸ்தவப் பார்வையிலானதாக அமைகிறது.