Abstract:
மொழிபெயர்ப்பென்பது விசேடமான ஆற்றல் தேவைப்படும் ஒரு நுட்பமான கலையாகும்.
இதனால் தான் அதை விஞ்ஞானமாகவும் கலையாகவும் அழைக்கின்றனர். இப்பணியை
நிறைவேற்றும் மொழிபெயர்ப்பாளன் இடைவிடாது நூல்களைக்கற்பவராகவும் எல்லா
விடயங்கள் குறித்து அறிவுடையவராகவும் இருக்கவேண்டுமென்று எதிர் பார்க்கப்படுகின்றது.
அந்தவகையில் தான் எதிர்கொள்ளும் மொழிபெயர்ப்பினை செவ்வனே செய்து
மூலநூலாசிரியரின் கருத்தைப் பிறிதொரு மொழியில் கொண்டுசேர்க்கத் துணைபுரிவதால்
மொழிபெயர்ப்பாளனும் நூலாசிரியராக மதிக்கப்பட்டு சட்டரீதியாக அவரது படைப்பிற்குப்
பதிப்புரிமை கிடைக்கின்றது. இருந்தபோதிலும் மூலநூலாசிரியர் போல் பதிப்புரிமையின்
அனைத்து சிறப்பம்சங்களையும் அவர்கள் பெற்றிடுவதில்லை என வெனுட்டி
குறிப்பிட்டுள்ளார். மூலநூலாசிரியரின் அனுமதியின்றி எந்தவொரு நூலையும்
மொழிபெயர்க்க இயலாதவர்களாகின்றனர். இத்தகைய கட்டுப்பாடுகள் இருப்பினும் கூட
மூலநூலசிரியரது நூலொன்றின் மொழிபெயர்ப்பிற்கு விற்பனை அதிகரிக்கும்போது
கிடைக்கும் இலாபத்தில் குறிப்பிட்டளவு இலாபத்தை மொழிபெயர்ப்பாளர்கள் பெற்றுக்
கொள்ளவும் இப்பதிப்புரிமை இடமளிக்கின்றது. எனவே இவ் ஆய்வின் நோக்கமானது
மொழிபெயர்ப்பாளனுக்கும் மூலநூலாசிரியருக்கும் இடையிலான பதிப்புரிமை
சிறப்புரிமைகளையும் அவர்களுக்கிடையிலான வேறுபாடுகளையும் லோரன்ஸ்
வெனுட்டியின் ஸ்கன்டல்ஸ் ஒப் ரான்ஸ்சிஷேன் எனும் நூலினையும் இலங்கையின்
புலமைச்சொத்து பாதுகாப்பது தொடர்பிலான 2003ம் ஆண்டின் 36ம் இலக்க
புலமைச்சொத்துச் சட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஆராய்வதாகும். இவ்வாய்வு
பின்வரும் பிரச்சினையை ஆராய்கிறது: மொழிபெயர்ப்பு ஒரு மூலப்படைப்பு என்பதைப்
பற்றிக் குறிப்பிடுகையில் மொழிபெயர்ப்பு பதிப்பரிமைச்சட்டத்திலேயே எல்லையுள்ளதா?
மேலும் இப்பதிப்பரிமைச் சட்டம் இலங்கை மொழிபெயர்ப்பாளர்களுக்கு எத்தகைய
வரையறைகளையும் சலுகைகளையும் வழங்குகின்றது என்பதைப்பற்றியும் ஆராய்கிறது.
இதற்கு ஒப்பீட்டு ஆய்வு முறை மற்றும் விவரிப்பு ஆய்வு முறை ஆகிய ஆய்வுமுறைகள்
பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்வு எதிர்கால மொழிபெயர்ப்புத்துறை மாணவர்களுக்கும்
மொழிபெயர்ப்பு ஆய்வில் ஈடுபடுபவர்களுக்கும் மொழிபெயர்ப்பின் எல்லையையும்
முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள உதவும்.