Abstract:
இந்த ஆய்வானது முழுநீள திரைப்படமொன்றின் தயாரிப்பு நடைமுறையில் பங்கு
பற்றியவர்களது (நடிகர்கள், நடிகரல்லாதோர்) நடிப்பு வெளிப்பாட்டின் இடர்களை
அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இலங்கைத் தமிழ்நாடகம், தமிழ்
திரைப்படம் என்று நோக்குகின்ற போது நாடகத்துறையில் நடிப்பிற்காக செய்யப்படும்
பயிற்சிகள் போல திரைப்படத் துறைக்கு கிடைக்காது இருப்பதன் குறைபாட்டை
அண்மைக்கால குறும்படங்கள், முழுநீள திரைப்படங்கள் என்பவற்றில் காணமுடிகிறது.
அண்மைக்காலங்களாக திரைப்படங்களைவிட குறும்படங்களே முதன்மையான
தயாரிப்புக்களாக காணப்படுகின்றன. இலங்கைத் தமிழ் குறு{ முழுநீள திரைப்படங்களில்
நடிப்பு பகுதியினை முதன்மைப்படுத்தாமையால் கலைத்துவ ஈர்ப்பு குறைந்தளவிலேயே
காணப்படுகிறது என்பது ஆய்வின் பிரச்சினையாக கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வுப்
பரப்பானது இலங்கைத் தமிழ்த்திரைப்படத்துறையில் நீண்ட கால வரலாற்றில் நடிப்பின்
போக்குகள் எப்படி இருந்தன என்பதைக் காட்டிலும் குறுக்குவெட்டுமுகமான அணுகு
முறையில் சமகால இலங்கைத் தமிழ்ப்படங்களில் நடிப்புத் தடைகளை இனங்காணல்
மற்றும் நிவர்த்திசெய்தற் பொருட்டு ஒரு முழுநீளதிரைப்படத்தை தகவல் சேகரிப்பிற்கு
பயன்படுத்தப்பட்டது. அத்தோடு நடிப்பை மேம்படுத்துவது, குறைபாடுகளை போக்க
வழிகண்டறிவது போன்றவை ஆய்வு நோக்கங்களாக உள்ளன. மேலும் இந்த ஆய்வானது,
அனுபவம் சார்ந்த வெளியினுள் நின்று பண்புசார் ஆய்வு அணுகுமுறையில்
'வியாக்கியானிப்புவாதம்' என்ற வகையினுள் வருவதோடு சுய அனுபவங்களையும்
மையமாகக்கொண்ட, ஆய்வாளனும் ஆய்வின் ஒரு பகுதியாக அமைந்திருக்கின்ற
'நிலைத்துவத்தன்மை' என்கிற அமைப்பினுள்ளும் நின்று இவ் ஆய்வு மேற்கொள்ளப்
பட்டுள்ளது. இங்கு ஒரு முழுநீள திரைப்படத்தில் நடித்தவர்களது நடிப்பு அனுபவங்களையும்
அப்படத்தில் ஒரு பாத்திரமாக நடித்த மற்றும் நெறிப்படுத்திய ஆய்வாளனின்
அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு தகவல்கள் திரட்டப்பட்டன. தகவல்
பகுப்பாய்வில் இலங்கைத் தமிழ்ப் படங்களது நடிப்பின் குறைபாட்டை போக்குவதில்
அகவயம், புறவயம் மற்றும் சூழ்நிலைமை என்கின்ற மூன்று வகையான பாத்திரவுருவாக்க
நுட்பங்கள் தீர்வாகவும் எதிர்காலப் பயிற்சிகளுக்கான முன்மொழிவாகவும் கண்டறியப்
பட்டன. இவ் ஆய்வானது ஒளிப்படத்துறையில் ஈடுபடு வோருக்கும், ஏனைய கலைப்
பயிலுனர்களுக்கும் கலைத்துறை கல்விப் புலத்தினருக்கும் பயன்தரும்.