Abstract:
மனிதன் தனது கருத்துக்களை ஏனையோருடன் பரிமாறிக்கொள்வதற்கான ஊடகமாக
திகழும் மொழியானது தானும் வளர்ந்து தன்னைப் பயன்படுத்தும் மனிதனையும் வளர்த்து
தனியாற்றல் பெற்றதாக விளங்குகின்றது. எண்ணத்தின் வடிவமாகவும் நாகரீகத்தின்
சின்னமாகவும் திகழும் இத்தகைய மொழி சமுதாயம் சார்ந்ததாகும் மொழி இல்லையேல்
சமுதாயம் இல்லை சமுதாயம் இல்லையேல் மொழி இல்லை என்று கூறுமளவிற்கு இரண்டும்
இரண்டறக்கலந்தவை. இந்த உறவை அடிப்படையாகக்கொண்டு மொழியானது அது
சார்ந்துள்ள சமுதாயத்தினையும் பண்பாட்டினையும் பிரதிபலிக்கும் கண்ணாடி என்று
குறிப்பிடப்படுகிறது. இதன் அடிப்படையில் சமுதாயத்தில் காலத்திற்கு காலம் ஏற்படுகின்ற
மாற்றங்களுக்கேற்ப மொழியும் அத்தகைய மாற்றங்களை உள்வாங்கி வளர்ச்சியடைந்து
வருகின்றது. இவ்வாறு சமுதாய மாற்றங்களை தன்னுள் ஏற்று நெகிழ்ச்சி நிலைப்
புத்தன்மையை பெற்று சொல்வளம் பெருக்கி வளர்ச்சியடைந்து வருகின்ற தமிழ்
மொழியினை ஆவணப்படுத்துவது முக்கியமான ஒன்றாகும். அந்தவகையில்
இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டிலிருந்து தமிழ்மக்களின் மொழிக்கையாளுகையில்
கோவிட்-19 பெருந்தொற்று நோய்நிலைமையுடன் தொடர்புடைய சொற்தொகுதிகளின்
வருகையானது புதிதாக இடம்பெற்ற மொழி மாற்றங்களுள் முக்கியமானதாகவும் மக்களால்
நாளாந்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவும் காணப்படுகிறது. எனவே இவ்வாய்வின்
பிரதான நோக்கம், கோவிட்-19 பெருந்தொற்றுக் காலப்பகுதியில் தமிழ்மொழிப்
பயன்பாட்டினுள் வருகைதந்த சொற்தொகுதிகளை கண்டறிந்து அவை தமிழ்மக்களின்
மொழிப்பயன்பாட்டில் கையாளப்படுகின்ற பல்வேறுபட்ட விதங்களை அடையாளப்
படுத்துவதாகும். அதேவேளை துணை நோக்கமாக அடையாளப்படுத்தப்படும் சொற்களின்
தோற்றுவாய், கட்டமைப்புகள் மற்றும் சொற்பொருள் மாற்றங்களை வெளிப்படுத்துதல்
என்பதுமாகும். எனவே இவ்வாய்வுக்கான முதல்நிலைத்தரவுகளானவை பங்குபற்றல் அற்ற
அவதானிப்பு முறை ஊடாக மக்களது நேரடிச்சூழல், இலத்திரனியல் ஊடக
மொழிப்பரிமாற்றங்களை அவதானிப்பதன் ஊடாக சேகரிக்கப்பட்டுள்ளதுடன், துணை
நிலைத்தரவுகளானவை ஆய்வுச்சஞ்சிகைகள், பத்திரிகைகள், ஆய்வுக்கட்டுரைகள் சுகாதார
சபை மற்றும் அரசாங்கத்தினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் ஊடாக சேகரிக்கப்பட்டு
சமுதாய மொழியியல் நோக்கில் பகுத்தாராய்ந்து விபரண முறையியல் அடிப்படையில் 11
வகையான மொழிப்பயன்பாட்டு; முறைகள் அடையாளப்படுத்தப் பட்டிருப்பதோடு அவற்றின்
தோற்றுவாய். மொழிக்கட்டமைப்பு, மற்றும் சொற்பொருள் மாற்றங்களும் வெளிக்
கொணரப்பட்டு ஆய்வின் முடிவுகளாக தொகுத்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.