| dc.description.abstract | 
அகராதி உருவாக்கமும் அகராதிச்சொற்களின் (Lexical word or Lexical unit) வரையறைகளும் தொல்காப்பிய உரியியல் காலந்தொட்டே தமிழில் நிகழ்ந்துவரும் 
தொடர்பணிகளாக உள்ளன. உரிச்சொல் என்பது அகராதிச்சொல் எனக் கொள்ளத்தக்கது 
என்பதைப் பேராசிரியர் க. பாலசுப்பிர மணியன் முதன்முதலாக வரையறைப்படுத்தினார். 
உரிச்சொற்கள் பெயர், வினை, பெயரடை, வினையடை, ஆக்கப்பெயர், தொழிற்பெயர் 
போன்ற பல்வேறு வடிவங்களிலும் தொல்காப்பியரால் தரப்பட்டுள்ளதை வகைதொகைப் 
படுத்தி ஆராய்ந்துள்ளார் பேராசிரியர் கி. நாச்சிமுத்து. உரிச்சொற்களின் வரையறையிலும் 
அவற்றிற்கான பொருளை விளக்குவதிலும் மேற்கோள்களைத் தருவதிலும்
உரையாசிரியர்கள் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர். அவர்களின் உரைகள் இல்லை 
என்றால் தொல்காப்பியத்தை விளங்கிக்கொள்வதிலேயே பேரளவிலான இடர்ப்பாடுகள் 
நேர்ந்திருக்கும். அவர்களின் தோள்மீது நின்றுகொண்டுதான் நாம் தொல்காப்பிய
ஆய்வுகளைத் தொடர்ந்து நிகழ்த்தி வருகின்றோம். தொல்காப்பியர் இலக்கணியாக 
மட்டுமல்ல சொற்பொருண்மையியலாளராகவும் அகராதியியலாளராகவும் உள்ளார்
என்பதற்குத் தொல்காப்பிய நூற்பாக்களே சான்றுபகர்வனவாக உள்ளன. பொருண்மை 
(சொற்பொருள்), சொன்மை (இலக்கணப்பொருள்), (தொல். சொல். 157), தெரிபு
(வெளிப்படைப்பொருள்), குறிப்பு (குறிப்புப்பொருள்) (தொல்.சொல். 158), எனப் பொருள் 
வகைப்பாடு களையும் 'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' ((தொல். சொல். 156) 
எனப் பொருண்மை வரையறையையும் ஒருபொருட்பலசொல், பலபொருட்சொல் என்றாற் 
போன்ற பொருண்மை அடிப்படையிலான சொல் வகைப்பாடுகளையும் வரையறுத்து 
உரைத்துள்ள தொல்காப்பியம் தமிழ் அகராதியியலின் தோற்றுவாயாக உள்ளது. இந்த மரபு 
தொடர்ந்து மேலெடுத்துச் செல்லப்படாததைப் போலவே அகராதி உருவாக்க மரபும் ஆய்வும் 
தொடர்ந்து மேலெடுத்துச் செல்லப்படவில்லை. தமிழகத்தில் ஐரோப்பியர்கள் தொகுத்த 
அகராதிகள் இன்றளவும் போற்றப்படுவனவாக உள்ளன. சென்னைப் பல்கலைக்கழகப் 
பேரகராதி என்றும் போற்றப்படும் சிறந்த அகராதியாகவே தொடர்ந்து இருந்துவருகின்றது. 
தேடப்படுவனவற்றைத் தரும் கற்பகவிருட்சமாக அதுவே உள்ளது. பல்கலைக்கழக 
வெளியீடாக வந்த இந்தப் பணியின் தொடர்ச்சியின்மை அகராதி உருவாக்கத்தில் பெரும் 
பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் வெளிவந்த சி. டபிள்யூ. கதிரைவேற் 
பிள்ளையின் தமிழ்ச் சொல்லகராதி தனித்துவம் வாய்ந்த முக்கிய அகராதியாக உள்ளது. 
இதைப் போலவே தமிழகத்தில் வெளிவந்த சாம்பசிவம்பிள்ளையின் தமிழ் ஆங்கில அகராதி 
பல்துறைச் சொற்களையும் தரும் களஞ்சியமாகத் திகழ்ந்துவருகின்றது. இவ்விரண்டின் 
படிகளும் கிடைப்பது இன்று அரிதாகவே உள்ளது. இந்தவகையில் தனியார் முயற்சிகள் 
மூலம் வெளிவந்த, வெளிவருகின்ற நோக்குநூல்களே பலவாக உள்ளன. இதற்கு, க்ரியா 
அகராதி ஒர் எடுத்துக்காட்டு. | 
en_US |