Abstract:
இவ் ஆய்வானது சங்கமருவியகால அறநீதி நூல்களில் ஒன்றான சிறுபஞ்ச முலம் என்னும்
நூலை வரலாற்று முறையின் அடிப்படையில் அணுகித் தொகுத்துப் பகுப்பாய்ந்து
வகைப்படுத்தியும் அதை அறவியல் அடிப்படையில் அணுகி அதனூடாக வெளிப்படும் சமூக
வாழ்வியல்சார் அறக் கருத்துக்களைப் பகுப்பாய்வு செய்தும் காட்டுவதோடு அந்நூலைக்
கட்டமைத்திருக்கும் அழகியல் அடிப்படைகளையும் இனங்கண்டு காட்டுவதாக
அமைந்துள்ளது. அத்துடன் இந்நூல் தொடர்பாக மேற்கொள்ளக்கூடிய மற்றைய ஆய்வுகள்
குறித்த சில பரிந்துரைகளையும் இது முன்வைத்துள்ளது. எல்லா இலக்கியங்களும்
அடிப்படையில் சமூக வாழ்வியல் சார்ந்த கருத்துக்களின் வெளிப்பாடுகளாக இருப்பதுடன்
அவை சில கருத்துக்களை நிலைப்படுத்துபவையாகவும் சில கருத்துக்களைக் கட்டவிழ்த்து
மீள்வாசிப்புச் செய்பவையாகவும் அவற்றைக் கேள்விக்கு உட்படுத்துபவையாகவும்
அதிகாரப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கெதிரான குரல்களாகவும் விளங்குகின்றன. பண்டைத்
தமிழர் வாழ்வில் ஏற்பட்ட நிலைமாற்றங்களும் சமண, பௌத்தின் வருகையும் களப்பிரர்
ஆட்சியும் தமிழகத்தில் அற மற்றும் தத்துவ உருவாக்கத்திற்குரிய தேவையினை
ஏற்படுத்தின. அதனால் பழந்தமிழ்ச் சமூகத்திலிருந்து நிலவுடைமைச் சமூகம் வரைக்குமான
அறக் கருத்துக்களைத் தொகுத்துக் கூறும் வகையில் பெருந்தொகையான அறநூல்கள்
தோன்றின. இவை அடிப்படையில் வைதிக மற்றும் அவைதிக சமயத்தின் அற, தத்துவக்
கருத்துநிலைகளின் வெளிப்பாடுகளாகவே அமைந்தன. இவ்வாய்வு பதினெண் கீழ்க்
கணக்கில் உள்ள சிறுபஞ்சமூலம் என்னும் நூலில் பதிவாகியிருக்கும் சமூக வாழ்வியல்
சார்ந்த அறக்கருத்துக்களை வகைப்படுத்தி ஆராய்ந்து உரைத்துள்ளது. மேலும் இந்நூலை
அழகியல் அடிப்படையில் அணுகி அது தன் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குத்
தனித்துவமான கட்டமைப்பு மற்றும் வெளிப்பாட்டுப் பண்புகளைத் கொண்டுள்ளது
என்பதையும் ஆராய்ந்துள்ளது. இந்த ஆய்வில் சிறுபஞ்சமூலத்தின் சமூக வாழ்வியல்சார்
கருத்துக்களை மட்டுமே ஆராயப்பட்டுள்ளது. இதற்கப்பால் சென்று பல்வேறு
கோட்பாடுகளை முன்நிறுத்தி ஆராய்வதன் மூலமே இந்நூல் பற்றிய ஆய்வுப்பரப்பின்
முழுமையினை வெளிக்கொணரமுடியும். அத்தகைய ஆய்வின் ஒரு பகுதியை இவ்வாய்வு
பூரணப்படுத்தியுள்ளதெனலாம்