Abstract:
சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்றவாறாக வகுக்கப்பட்டன.
எட்டுத் தொகை நூல்களில் அகத்திணைக்குள் இடம்பெறுகின்ற ஐந்து நூல்களுள்
குறுந்தொகையும் கலித்தொகையும் உள்ளடங்குகின்றன. அகத்திணைக்குரிய
பண்புகளைத் தொல்காப்பியம் சூத்திரங்கள் வாயிலாகத் தந்திருக்கின்றது. இப்பண்புகள்
சங்க இலக்கியங்களில் மரபு ரீதியாகப் பேணப்பட்டு வந்திருக்கின்றன. குறுந்தொகையில்
இம் மரபு பேணப்பட்டிருக்கக் கலித்தொகையில் இது புறக்கணிக்கப்பட்டு மரபு
மாற்றமொன்று இடம்பெற்றிருக்கின்றது. இவ்வகையில் குறுந்தொகை, கலித்தொகைச்
செய்யுட்களில் காணப்படும் வேறுபாட்டம்சங்களை இனங்கண்டு கொள்வதாக இந்த
ஆய்வு அமைந்திருக்கிறது. இந்த ஆய்வினுடைய பிரதான மூலங்களாகக் குறுந்தொகை,
கலித்தொகை, தொல்காப்பியம் அமைந்திருக்கத் துணை மூலங்களாக ஏனைய சங்க
இலக்கியங்கள், இவ்வாய்வுடன் தொடர்புடைய ஆய்வுகள், ஆய்வுக் கட்டுரைகள்
முதலானவையும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.