Abstract:
ஆசிரியத் தொழில் மகத்தானது. சீரிய சமூக உருவாக்கத்தின் அச்சாணியாக இச்சேவை காணப்படுகிறது அது மாத்திரமன்றி அனைத்துத் துறைகளுக்குமான மூல வழிகாட்டியாகவும் இந்தத் தொழிலே விளங்குகின்றது. இந்தத் தொழிலை எந்த அளவுக்கு வினைத்திறனுள்ள முறையில் ஆசிரியர்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதில் தான் அந்த சேவையின் புனிதத் தன்மை தங்கியுள்ளது. ஒரு வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் பல உள்ளன. அவற்றில் ஆசிரியரின் வகிபங்கு பிரதானமானது. ஆசிரியர்கள் தொழில் வாண்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மாத்திரமே சிறந்த வகுப்பறைக் கற்பித்தலை மேற்கொள்ள முடியும். இசை,நடன பாட கற்றல் கற்பித்தலின் போது கற்றல் - கற்பித்தல் துணைச்சாதனங்களின் பயன்பாடு மிகக் குறைவாகவே காணப்படுகிறது என்பதை வகுப்பறைச் செயற்பாடுகளின் போது அவதானிக்க முடிகின்றது. இருந்த போதும் நடன பாட ஆசிரியர்கள் சிலர் நவீன கற்றல் கற்பித்தல் உபகரணங்களை கையாளுவதில் ஆர்வம் காட்டுகின்ற அதே வேளை சிரமத்தை எதிர் கொள்வதனையும் காணலாம்.
மேலும் அழகியல் பாடம் கற்கும் மாணவ, மாணவியரின் இரசித்தல் திறனை உச்ச நிலையில் பேணுவதற்கு நவீன கற்றல் கற்பித்தல் துணைச் சாதனங்களின் பயன்பாடு அவசியமானது என்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.