Abstract:
கால்நடைகளாகத் திரிந்த விலங்குகளிலிருந்து பிரிந்து கருவிக்கையாட்சி, மொழிப் பயன்பாட்டின் வழி பகுத்தறிவுள்ள விலங்காக மனிதன் உருப்பெற்றான். இயற்கையின் மீது அவனுக்கிருந்த வியப்பும் அச்சமும் பக்தியாகி கடவுளரையும் சமயத்தையும் தோற்றுவித்தது. அந்த இறைவனை - இலட்சியத்தை நோக்கிய சமயவியலாளர்களின் பயணமே பாதயாத்திரை எனக் கூறப்படுகின்றது. இலங்கையின் இந்துப்பாரம்பரிய வரலாற்றில் நீண்ட வரலாறுடைய முதன்மை பெறும் பாதயாத்திரையாக கதிர்காமப் பாதயாத்திரை காணப்படுகின்றது. யாழ்ப்பாணம், மலையகம், மட்டக்களப்பு, கொழும்பு என இலங்கையின் எல்லாப்பாகங்களிலிருந்தும் மக்கள் பாதயாத்திரையாகப் புறப்பட்டு கதிர்காம பாத யாத்திரையை மேற்கொண்டு வருகின்றார்கள். குறித்த பாதயாத்திரையின் முக்கிய பிராந்தியமாக உகந்தை உள்ளது. கதிர்காமப் பாதயாத்திரை வழிபாட்டு ரீதியாகப்பெறும் முக்கியத்துவத்தை, அதன் அனுபவத்தை ஆய்வுப்பிரச்சினையாகக் கொண்டு இந்த ஆய்வு நிகழ்த்தப்படுகின்றது. இலங்கை முருகவழிபாட்டிலுள்ள யாத்திரையினது முக்கியத்துவம், அனுபவம் என்பவற்றை அறிவது இந்த ஆய்வின் நோக்கமாகும். கதிர்காமப் பாதயாத்திரையின் சங்கமிப்பு மையமாக உகந்தை அமைவதனால் இப்பிராந்தியம் ஆய்வெல்லை யாகக் கொள்ளப்படுகின்றது. இதில் வரலாற்று ஆய்வு, விளக்கமுறை ஆகிய முறையியல்களும் களவாய்வும் ஆய்வுமுறையியல்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாதயாத்திரை பற்றிய ஆய்வுகளில்ஈடுபடுபவர்க்குஇந்தஆய்வுதுணைசெய்வதாகஅமையும்.