Abstract:
இலங்கையில் இந்துப்பண்பாடு நிலைபெற்றுள்ள பிரதேசங்களில் மட்டக்களப்புப் பிரதேசமும் ஒன்றாகும். மட்டக்களப்புக் கோயில்களும் சமூக வழமைகளும் என்ற தலைப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள இவ்வாய்வானது மட்டக்களப்புப் பிரதேசத்தில் காணப்படுகின்ற கோயில்களையும் அவற்றினூடாக வெளிப்படுத்தப்படும் சமூக வழமைகளையும் வெளிக்கொணர்வதனை முக்கிய நோக்கமாகக் கொண்டு நிகழ்த்தப்பட்டுள்ளது. இவ்வாய்வானது விபரண ஆய்வு முறை, வரலாற்று ஆய்வு முறை ஆகிய ஆய்வு முறையியல்களின் ஊடாக நிகழ்த்தப்பட்டுள்ளது. இவ்வாய்வில் கள ஆய்வு முக்கிய இடம்பெற்றிருக்கின்றது. இந்துக்களுடைய வழிபாட்டிற் சமயம் வகிக்கின்ற முக்கிய பங்கினை எடுத்துக்காட்டும் சான்றுகள் கோயில்களாகும். இவை சமய உணர்வுகளோடும் சமூகநம்பிக்கைகளோடும் ஒன்றாகக்கலந்து இந்துசமூகத்தின் ஓர் அங்கமாகவிளங்கிவருகின்றன. அந்தவகையில்; காலத்தால் தொன்மை வாய்ந்த கோயில்கள் பல மட்டக்களப்புத் தேசத்தில் காணப்படுகின்றன. இவற்றினூடாக மட்டக்களப்பின் தனித்துவமான இந்துப் பண்பாட்டம்சங்கள் வெளிப்படுத்தப்படுவதனைக் காணமுடிகின்றது. பண்பாட்டின் நிலைக்களனாகக் கோயில்கள் காணப்படுகின்றன. சமூகமானது தமது பிரதேசத்தில் அமைந்திருக்கின்ற கோயில்களுடன் தொடர் புடையதாகும். கோயில்கள் இறை வழிபாட்டிற்குரிய இடமாக மட்டுமல்லாமல் கலைகளை வளர்க் கும் இடமாகவும் அறநிலையங்களாகவும் சமூக ஒற்றுமைக்கு வழிகாட்டும் இருப்பிடங்களாகவும் விளங்குகின்றன. சமுதாயமும் கோயிலும் கொண்ட பிணைப்பின் காரணமாக கோயிலைத் தழுவிய குடிமக்களும் குடிகளைத் தழுவிய கோயிலுமாக அவை சிறப்புப் பெற்றன. இத்தகைய பின்னணி யிலேயே மட்டக்களப்புக் கோயில்களும் சமூக வழமைகளும் என்ற தலைப்பில் இவ்வாய்வு அமைந்துள்ளது. கோயில்கள் சமூகத்தைப் பிரதிபலிப்பனவாகவும் சமூக வலுவூட்டலுக்கானதொரு இடமாகவும் செயற்படுகின்றன. விழாக்காலங்களில் கோயில்களிலே நடைபெறுகின்ற வைபவங் களும் அவற்றில் அனுசரிக்கப்படுகின்ற சம்பிரதாயங்களும் சமூக வலுவூட்டலைக் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. கோயில்களை மையமாகக் கொண்ட சமூக வழமைகளான சமூகத்தின் தேவைகள், நோக்கங்கள் என்பவற்றை வெளிப்படுத்துவதை இலக்காகக் கொண்டிருப்ப தால் அவை எப்போதும் சமூகத்தின் பிரதிபலிப்பாகவே அமைகின்றமையினைக் காணலாம். இதனடிப்படையில் கோயில்களை மையப்படுத்திய சமூக வழமைகள் இவ்வாய்வினூடாக வெளிப் படுத்தப்படுகின்றன. இவை தலைமுறைகளாகத் தொடர்ந்துவரும் பாங்கு இந்த ஆய்வின் மூலமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.