dc.description.abstract |
கர்நாடக இசையின் இரு கண்களாக விளங்குபவை கல்பித சங்கீதமும் மனோதர்ம சங்கீதமும் ஆகும். இசைவல்லுனரால் முன்னரே இயற்றப்பட்ட அனைத்து வகை உருப்படிகளையும் கல்பித சங்கீதம் என்பது குறிக்கும். ஆரம்ப பாடங்களான வரிசைகள் உட்பட கீதம், ஸ்வரஜதி, வர்ணம், கீர்த்தனை, பதம், தில்லானா போன்ற அனைத்து வகை உருப்படிகளும் கல்பித இசையைச் சேர்ந்தவை. மனோதர்ம இசையில் இராகஆலாபனை, நிரவல், கற்பனாஸ்வரம், தானம் ஆகியன இடம்பெறும். இந்த இசை அவரவர் பயிற்சிக்கேற்பவும் வித்துவத்திற்கேற்பவும் தத்தமது கற்பனையில் பாடப்படுகிறது. மனோதர்மத்திற்குரிய முக்கிய தளமாக இசை உருப்படிகள் காணப்படுவதால் இசைஉலகில் மிக முக்கிய இடத்தை இவை வகிக்கின்றன. இசையைப் பொறுத்தவரையில் மொழி முக்கிய பங்கினை வகிக்கின்றது. இராகதாள பாவத்துடன் சாகித்திய பாவமும் சிறப்பாக அமையும் பட்சத்தில் தான் ஒவ்வொரு உருப்படியின் மதிப்பும் உயருகின்றது. ஒவ்வொரு வாக்கேயகாரரும் தமது முழு எண்ணங்களையும் வெளிப்படுத்தத் தத்தம் மொழியைப் பிரயோகிக்கும் போது அவ் உருப்படிகளுக்கு இரசிகர்களிடையேயும் வித்துவான்களிடையேயும் நல்ல அந்தஸ்துக் கிடைக்கின்றது. தமிழ் மொழியும் இசையும் இரண்டறக் கலந்திருக்கும் பாங்கு தொன்மையான தமிழ் மொழிக்கு உயர்வைத் தருகிறதுதமிழ், வடமொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி, மராட்டி போன்ற பல மொழிகளில் பல்வேறு வாக்கேயகாரர்களால் இசைஉருப்படிகள் இயற்றப்பட்டுள்ளன. எனினும் ஒரே ஸ்வரஅமைப்புள்ள பல உருப்படிவகைகளுக்கு பல மொழிகளில் சாகித்தியம் அமைக்கப்பட்டுள்ளமை இந்த ஆய்விற்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதற்கு ஆதாரமாக ஸ்வரஜதி, ஜதிஸ்வரம், கீர்த்தனை, கிருதி ஆகியவற்றில் சில படைப்புக்கள் மட்டும் இவ் ஆய்விற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இசையாளர்களும் இசைக்கல்வியாளர்களும் தமிழ் மொழியிலும் பார்க்கப் பிறமொழிப் பாடல்களைக் கூடுதலாக விரும்புவதும் தமிழ் இரசிகர்கள் மட்டும் உள்ள மேடைக்கச்சேரிகளில் பிறமொழிப் பாடல்களின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்படுவதும் இவ் ஆய்விற்குரிய பிரச்சனையாகக் கொள்ளப்படுகின்றது. விவரணப் பகுப்பாய்வு முறை மூலம் இவ்ஆய்வு நகர்த்தப்படுகிறது. |
en_US |