Abstract:
ஆதிகாலந் தொட்டு உலகிலுள்ள மக்கள் அனைவரும் கடவுள் உணர்ச்சிக்கு ஆட்பட்டுக் காணப்படுகிறார்கள். நாகரிகம் அடையாத மக்கள் முதல் சிறந்த நாகரிகமடைந்த நிலையில் உள்ள மக்கள் வரை அனைவருக்கும் அவரவர் நிலைக்கு ஏற்ப கடவுள் உணர்ச்சி இயல்பாகவே அமைந்திருக்கிறது. சித்தர்களும்,ஞானிகளும், நாயன்மார்களும் இறைவனோடு கலந்து பழகி இன்புற்றுத் திளைத்தவர்கள். நாயன்மார்கள் பாடியருளிய திருமுறைகள் கூற்றுப்படி நாம் ஆலயந் தொழுவது அவசியம். அதுவே நாம் முத்தி பெறுவதற்கு ஒரு சாதனமாகிறது. சமயங்களுள் மிகப்பழமையான இந்துசமயத்தின் கோட்பாடுகள் அனைத்தும் ஆன்மாவைப் பிறவித் தளையிலிருந்து நீங்கி முத்தி பெறச்செய்யவேண்டும்.எனும் நோக்கத்தைக் கொண்டுள்ளன. இதற்கு இன்றியமையாத அம்சமாகக் காணப்படுவது இறைவழிபாடாகும். இதற்குரிய சமயக்கொள்கை விளக்கங்களையும் வழிபாட்டு முறைகளையும் விளக்குவதற்காக வடமொழியிலும், தமிழ்மொழியிலும் இலக்கியங்கள் எழுந்தன. ஆலய வழிபாட்டில் முக்கியம் பெறுகின்ற மகோற்சவக் கிரியைகளில் இடம்பெறும் திருமுறைகள், நவசந்திப் பண்கள் பற்றி இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது. இவ் ஆய்வுக்குரிய பிரச்சினையாக ஆலயத்தின் கோபுரவாசல் அமைந்துள்ள திக்குகளுக்கேற்ப நவசந்திப்பண்கள் பாடப்படவேண்டுமா என்ற வினா முன்வைக்கப்படுகிறது. ஆலயக் கிரியைகளைச்செய்யும் குருமாருக்கும், திருமுறைகளைப் பாடும் ஓதுவார்களுக்கும் இதுபற்றிய சிறந்த விளக்கத்தைக் கொடுப்பதே இவ்ஆய்வின் குறிக்கோளாகும். நூல்கள் மூலமாகவும் நேர்காணல்கள் மூலமாகவும் தரவுகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு முறைமை மூலம் இவ் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆலயகோபுர வாசல் அமைந்துள்ள திக்கின் அடிப்படையில் நவசந்திப்பண்களின் ஒழுங்கு அமைதல் சிறந்தது எனும் கருது கோளின் அடிப்படையில் இவ்வாய்வு நகர்த்தப்படுகிறது.