Abstract:
இந்து சமுகத்தவர்களால் புராதன காலம் தொடக்கம் பின்பற்றப்பட்டு வருகின்ற நான்கு அடுக்குகளைக் கொண்ட சமூகக் கட்டமைப்பு என்று வர்ணக்கோட்பாட்டைக் கூறலாம். 'வர்ணம்' என்ற பதம் நிறம், வெளிவடிவம், தோற்றம், ஒளி எனப் பொருள்படும். ஆரியப்பண்பாட்டைக் கொண்ட மக்கள் தம்மை மற்றையோரிடமிருந்து வேறுபடுத்திக் கொள்ள இச்சொல்லாடலை முதலில் கையாண்டனர். ஆதன் பின்னர் சமூகம் முழுவதிலும் வாழ்ந்த மக்கள், தொழில், நிறம், குணம் என்ற அடிப்படைகள் வகுக்கப்பட்டு காலப்போக்கில் பிறப்பின் அடிப்படையில் என்று கருத்துருவாக்கம் வலுப்பெற்றது. பிற்பட்ட காலத்தில் வர்ணம் பிறழ்வுநிலை அடைந்து பல சாதிகளும், உபசாதிகளும் தோற்றம் பெற்றன. மக்கள் மத்தியில் தவறான புரிதலும், விமர்சனங்களும் ஏற்படத்தொடங்கின. இவ்வாய்வு இந்து சமுதாயத்தில் வர்ணக்கோட்பாடு தொடர்பான கருத்தாடல்களை மதிப்பீடு செய்து வெளிக்கொணர்தலை பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாய்வானது வரலாற்றியல் ஆய்வு, மற்றும் விபரண ஆய்வு முறைக்கமைவாக கட்டமைக்கப்பட்டு தரவுகள் உய்த்தறிவாய்வு, தொகுத்தறிவாய்வு முறையியலினை அனுசரித்தும் ஆய்வின் தேவை கருதி ஒப்பீட்டு ஆய்வு முறை மூலமும் உள்ளடக்கப் பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் மதிப்பீடு செய்யப்படவுள்ளன. இந்து சமய வரலாற்றிலே நால்வகை வர்ணமும் வேதகாலத்தில் விராட புருடனுடைய வேள்வியிலிருந்து தோற்றம் பெற்றவகை அது பின்னர் கருத்துருவாக்கம் பெற்ற முறை என்பன வடமொழி மற்றும் தமிழ் மொழி மூலங்களை ஆதாரமாகக் கொண்டு எடுத்தியம்பப்பட்டுள்ளது. மனுதர்ம சாத்திர காலத்திற்குப் பின்னர் வர்ணப் பிறழ்வால் தோற்றம் பெற்ற சாதிகளால் சமூகத்தில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளைக் கண்டித்து பல சித்தர்கள், வடஇந்திய பக்திநெறியாளர்கள், நவீன சீர் திருத்த சிந்தனையாளர்கள், சமகால சீர்திருத்த சிந்தனையாளர்கள் என்போர் தமது செயற்பாடுகள் மூலமும், பனுவல்கள் வாயிலாகவும் பல கண்டனங்களையும், விமர்சனங்களையும் காலத்திற்கு காலம் முன்வைத்து வருகின்றனர்.