Abstract:
மாந்திரீகம் என்பது கடுமையான மந்திரச் சடங்குகளின் வழியாக நிகழ்த்தப்படுகின்ற ஒரு வழிபாட்டு முறையாகும். நம் மனதை ஒருமுகப்படுத்தி மனத்தால் மந்திரங்களை உருவேற்றி நினைத்த காரியங்களை உருவேற்றிக் கொள்வது மாந்திரீகத்தின் செயற்பாடு எனலாம். இத்தகைய மந்திரமும் சமயமும் ஒன்றிலொன்று தங்கியுள்ளன. பில்லி, சூனியம், வசியம், ஏவல், செய்வினை, தீய ஆவிகளின் செயற்பாடு, மை பார்த்தல் போன்ற அம்சங்களைக் கொண்ட மாந்திரீகமானது எல்லா சமூகத்தினரிடையேயும் சிறப்பாக பயிலப்பட்டு வரும் அதே வேளை அனைவரது மனதிலும் நம்பிக்கையாக நிலைபெற்றிருக்கின்றது. இங்கு ஆய்வுத்தளமானது சப்ரகமுவ மாகாணத்தின் தலைநகரான இரத்தினபுரி மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழும் இந்து, பௌத்த மக்களின் வாழ்வியலில் பிணைந்துள்ள மாந்திரீக நம்பிக்கைகளை மட்டும் எல்லையாகக் கொண்டு வரையறுக்கப்பட்டுள்ளது. பொதுவாக மாந்திரீகம் என்பதன் விளக்கமும் அதன் உள்ளடக்கமும் தரப்பட்டுள்ளதுடன் இலங்கையில் இந்து, பௌத்த மக்களின் பரஸ்பரத் தொடர்பானது அவர்களது மாந்திரீக பயன்பாட்டில் செல்வாக்கு செலுத்தும் பாங்கும் எடுத்தியம்பப்பட்டுள்ளது. குறிப்பாக இரத்தினபுரியில் இந்து சமயத்தவருடன் பௌத்த சமயத்தினரின் உறவு எவ்வாறு அமைந்துள்ளது? இங்கு பெரும்பான்மையாக வாழும் பௌத்த சமயத்தவரின் மாந்திரீகம் இந்து மரபை ஒத்திருக்கின்றதா? இல்லையா? போன்ற வினாக்களுக்கு விடை காணும் முகமாக இவ்வாய்வு அமைகின்றது. அத்துடன் இந்து பௌத்த சமூகத்தினரிடையே நிலவுகின்ற மாந்திரீக நம்பிக்கைகள் பெரும்பாலும் ஒத்த தன்மை உடையதே என்பதையும் சமுதாயப் பார்வையில் மாந்திரீகம் தீய செயற்பாடாகவே காணப்பட்டாலும் இது மக்கள் வாழ்வியலின் நம்பிக்கைசார் கலையாகவே நோக்கப்படுகின்றது என்பதையும் வெளிக்கொணர்வதை நோக்கமாகக் கொண்டு இந்த ஆய்வு அமைந்துள்ளது எனலாம்.