dc.description.abstract |
இலங்கையின் வடபகுதியிலுள்ள சில்லாலக் கிராமம் பாரம்பரிய கத்தோலிக்க மரபைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. வரலாற்று ரீதியான சான்றுகளின் படி போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்திலேயே கத்தோலிக்க மரபு சில்லாலைக் கிராமத்திற்கு சென்றிருந்ததாகக் கருதப்பட்டாலும் போர்த்துக்கேயர் வரவுக்கு முன்னரே சில்லாலையில் கத்தோலிக்க மரபு நிலைபெற்றிருக்கலாம் என்பது பல வரலாற்றாய்வாளர்களின் உத்தேசமாகும். போர்த்துக்கேயரை அடுத்து வருகை தந்த குடியேற்ற வாதிகளான ஒல்லாந்தர் இலங்கை முழுவதிலும் கத்தோலிக்க மரபை தடை செய்தனர். ஆயினும் சில்லாலைக் கிராமத்தில் கத்தோலிக்க மரபு மறைமுகமாகப் பேணப்பட்டது. இப் பின்னணியில் இந்தியாவின் கோவாப்பகுதியைச் சேர்ந்த மறைப்பணியாளர் யோசவ்வாஸ் அவர்களின் வருகையானது இலங்கை மக்களின் கத்தோலிக்க மரபைப் பாதுகாக்க துணை செய்தது. அவரது இலங்கைப் பணி சில்லாலைக் கிராமத்திலேயே ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். முறைப்பணியாளர் யோசவ்வாஸ் அவர்களின் பணிக்கு சில்லாலைக் கிராமம் ஆரம்பப்புள்ளியாக அமைந்தமைக்கான காரணங்களைக் கண்டறிவதும் இவ்வாய்வின் பிரதான இலக்குகளில் ஒன்றாகும். இக் கிராமத்தில் யோசவ்வாஸ் அவர்களின் மறைப்பணி பற்றிய பல பாரம்பரியச் சான்றுகளும், செவி வழிக் கதைகளும் ஆவணப்படுத்தப்படாமல் காணப்படுகின்றன. அவற்றை சேகரித்து, உண்மைத் தன்மையை அறிந்து தொகுப்பதிலுள்ள சிக்கல் ஆய்வுப் பிரச்சனையாக முன்வைக்கப்படுகிறது. இதனடிப்படையில் இவ்வாய்வில் இலங்கை கிறிஸ்தவ வரலாற்றில் ஒல்லாந்தர் காலத்தில் கத்தோலிக்க மக்களின் நிலை, மறைப்பணியாளர் யோசவ்வாஸ் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள், அவரை இலங்கைக்கு மறைப்பணியாற்ற வருவதற்கு உந்திய காரணங்கள் ஆகியன முன்வைக்கப்பட்டு, சில்லாலைக் கிராமத்தில் அவர் ஆற்றிய பணிகள் என்பன ஆய்விற்குட்பட்டுள்ன. இலங்கையில் கத்தோலிக்கர்களின் நிலை பற்றிய வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொள்ள வரலாற்று ஆதாரமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. மறைப்பணியாளர் யோசவ்வாஸ் அவர்களின் பணி பற்றிய ஆவணப்படுத்தப்படாத தகவல்கள் காணப்படுகின்றமையால் இவற்றின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள உய்த்தறிவு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வு தொடர்பான தரவுகள் மூல நூல்கள், துணை நூல்களிலிருந்தும், நேர்காணல் அவதானிப்பு முறை மூலமாகவும் பெறப்பட்டுள்ளன. |
en_US |