Abstract:
நாட்டினுடைய அபிவிருத்திக்கான முதுகெலும்பாக விவசாயம் காணப்படுகிறது. மனிதன் வெள்ளம், புயல், வறட்சி, இடப்பெயர்வு என்பன உண்டாகும் போதே உணவின் பெறுமதியை அறிகின்றான். எனவே நாடுகளின் அபிவிருத்தியில் விவசாயத் துறைக்குப் பங்குண்டு. குறிப்பாக இலங்கையின் அபிவிருத்தியிலும் விவசாயத் துறையானது பாரிய அங்கம் வகிக்கிறது. இலங்கை பாரம்பரியமாக உணவு உற்பத்தியில் தன்னிறைவுடன் விளங்குவதைப் போன்று இயேசு வாழ்ந்த காலத்தில் பாலஸ்தீனாவிலும் விவசாயம் முக்கிய அங்கம் பெற்றிருந்தது. குறிப்பாக ஏழைகள் மத்தியிலிருந்த உணவின் தேவை இயேசுவின் விவசாயம் சார்ந்த போதனைகளுக்கு முகவரியாக அமைந்தது. இதனடிப்படையில் திருவிவிலியத்தில் புதிய ஏற்பாட்டின் லூக்கா நற்செய்தியில் இடம்பெறும் இயேசுவின் போதனைகளே ஆய்விற்கு மையமாகும். திருவிவிலியத்தில் 'கடும் உழைப்பையும் உழவுத் தொழிலையும் வெறுக்காதே இவை உன்னத இறைவனால் ஏற்படுத்தப்பட்டவை' (சீ.ஞா.7:15) எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு வலு சேர்ப்பதாக இயேசுவினுடைய விவசாயம் சார்;ந்த போதனைகள் அமைந்துள்ளன. லூக்கா நற்செய்தியிலுள்ள விவசாயத்தை மையப்படுத்திய விடயங்கள் துணுக்காய்ப் பிரதேச விவசாயப் பின்னணியோடு ஒப்பிட்டு நோக்கப்படாமை ஆய்வுத் தேடலிற்குக் களம் அமைத்தது. இப் பின்னணியில் துணுக்காய்ப் பிரதேச விவசாயமானது சமகாலச் சூழலில் இறைத் திட்டத்திற்கு ஏற்றதா? அல்லது முரணானதா? என்பது ஆராயப்பட்டுள்ளது. துணுக்காய்ப் பிரதேச விவசாயத்தை இயேசுவின் விவசாயம் சார்ந்த போதனைகளுடன் ஒப்பிட்டுத் துணுக்காய்ப் பிரதேசத்தில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பரிந்துரைகளை முன்வைப்பதே ஆய்வின் நோக்கமாகும். லூக்கா நற்செய்தியின் விளக்கவுரைகள், சஞ்சிகைகள், நூல்கள் ஊடாக இயேசுவின் போதனைகளில் வெளிப்படும் விவசாயம் சார்ந்த விடயங்கள் உய்த்துணர் முறை மூலம் ஆராயப்பட்டுள்ளது. இதனடிப்படையில் துணுக்காய்ப் பிரதேச விவசாயிகள் மற்றும் விவசாயத் திணைக்களப் பொறுப்பதிகாரிகளிடம் நேர்காணல், வினாக்கொத்து, கள ஆய்வு என்பவற்றின் வழியாகத் துணுக்காய்ப் பிரதேச விவசாயம் சார்ந்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. லூக்கா நற்செய்தியில் எடுத்துரைக்கப்படும் விவசாயம் சார்ந்த விடயங்களையும் துணுக்காய்ப் பிரதேச விவசாய சார்ந்த விடயங்களையும் ஒப்பீட்;டு முறையில் கண்டறிந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்குத் தொகுத்துணர் முறை கையாளப்பட்டுள்ளது. லூக்கா நற்செய்தியின் சமவெளிப் போதனைகள் (லூக்.6:20-26), விதைப்பவன் (லூக்.8:4-8), அறிவற்ற செல்வன் (லூக்.12:13-21), கொடிய குத்தகைக்காரர் (லூக்.20:9-16) போன்ற உவமைகளில் காணப்படும் விவசாயம் சார்ந்த குறிப்புக்களானது பாலஸ்தீன விவசாய முறைகளையும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களையும் எடுத்துரைக்கின்றன. ஒப்பீட்டு நிலையில் கருத்துக்களை முன்வைப்பதற்காகத் துணுக்காய்ப் பிரதேச விவசாயிகளிடமிருந்து வினாக்கொத்து வழியாகத் தரவுகள் பெறப்பட்டன. ஆகவே ஆய்வானது துணுக்காய்ப் பிரதேச விவசாயத்தின் முக்கியத்துவம், இயற்கை வளங்களின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அழிவைத் தடுக்கும் செயன்முறைக்கு அறைகூவல் விடுக்கிறது. துணுக்காய்ப் பிரதேசத்தில் சுற்றுச்சூழல் அமைப்புக்கள் விரிவாக்கப்பட்டு விவசாயம் சார்ந்த விடயங்கள் விழிப்புணர்வூட்டப்பட வேண்டும். அத்துடன் விவசாயிகள் அனைவரும் இதில் அங்கத்துவம் பெற வேண்டும். காடுகளை அழித்தல், நவீன உரங்களைப் பாவித்தல், ஆற்றுமணல் அகழ்வு என்பனவற்றைத் தடை செய்வதன் மூலம் இயற்கை வளங்களை நுண்மதியுடன் பயன்படுத்தல், எதிர்காலச் சந்ததியினருக்கு வளமான பூமியைப் பெற்றுக் கொடுத்தல் என்னும் உயரிய சிந்தனைகளை நடைமுறைப்படுத்தும் பல பரிந்துரைகள் ஆய்வில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.