Abstract:
இலங்கையில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்கள் 1823ஆம் ஆண்டு தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 2023ஆம் ஆண்டுடன் இவர்கள் இலங்கைக்கு வருகை தந்து இருநூறாவது ஆண்டு நிறைவடைகின்றது. இலங்கையின் அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக விளங்கிய இவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் கௌரவிக்கப்பட வேண்டும். ஆயினும் மலையத்தைச் சார்ந்த இம்மக்கள் இலங்கையில் வாழ்ந்த இந்த இரு நூற்றாண்டு கால நினைவையும் ஒரு துக்ககரமான வாழ்வியலாகவே நோக்குகின்றனர். இதற்கான காரணம் என்ன? என்பதே ஆய்வுத்தேடலிற்கு வழியமைத்தது. ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட உணர்வுடன்; வாழும் மலையக மக்களின் வாழ்க்கைப் பின்னணியைக் கிறிஸ்தவ கண்ணோட்டத்தில் எடுத்துரைப்பது ஆய்வின் மைய நோக்காகும். இதற்கென கிறிஸ்தவ சமூக போதனைகளை மையப்படுத்தி, அதன் எடுத்துரைப்புகளுக்கு அமைய மலையக மக்களின் வாழ்வு, மனித உரிமை, மனித மாண்பு எவ்வாறு நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை முன்வைக்கும் விதத்தில் ஆய்வு அமையப் பெற்றுள்ளது. திருவிவிலியம், திரு அவையின் சமூக போதனைகளில் வெளிப்படும் மனித உரிமை, சமூக நீதி தொடர்பான விடயங்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு தொகுத்தறிவு முறையியலைக் கையாண்டு விடயங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடையாளம் காண்பதற்கு அவற்றோடு தொடர்புடைய நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றின் தரவுகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து இலங்கையின் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட மேற்பார்வையாளர்கள், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், மலையகம் 200வது வருடத்தை மையப்படுத்திச் செயற்படும் தலைவர்கள், விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள் போன்றவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் மூலம் ஆய்வுக்குத் தேவையான சமகாலப் பின்னணிக்குரிய தரவுகள் பெறப்பட்டுள்ளன. ஆய்வில் மலையக மக்கள் இருநூறு வருட காலமாக எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகளான வீடு மற்றும் காணி உரிமை சார் பிரச்சினைகள், வாழ்வுரிமை அடையாளம் தொடர்பான பிரச்சினைகள், அடிப்படை வசதிக்கேற்ற ஊதியம் வழங்கப்படாமை, பெண்களுக்கு எதிரான வன்முறை, அரசியல், தொழில், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, இயற்கை அனர்த்தங்களில் ஏற்படும் உயிர்ச் சேதங்கள் என்பனவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மலையக மக்களின் வரலாற்றில் அவ்வப்போது அவர்களுக்கான சலுகைகள் உரிமைகள் வழங்கப்பட்டாலும் அவர்களின் அடிமைத்தனத்தை நிறுத்தும் செயற்திட்டங்கள் இன்று வரை முன்வைக்கப்படவில்லை என்பது ஆய்வினூடாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆய்வில் கண்டறியப்பட்ட விடயங்களினூடாக சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது ஒடுக்கப்பட்ட மலையக மக்களின் வாழ்விற்குத் தேவையான முன்னெடுப்புக்களையும் அவர்கள் அனுபவித்து வரும் கொடுமைகளையும் பதிவு செய்வதன் மூலம் வெளியுலகின் உதவியை நாடுவதற்கான வாய்ப்பு ஏற்படும். மலையக சமூகத்தை இலங்கையின் ஒரு சிறுபான்மைத் தேசிய இனமாக அங்கீகரிப்பதன் மூலம் அவர்களின் அடிப்படைத் தேவைகள் மனித மாண்புடன் நோக்கப்படும். இதன் மூலம் அவர்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு ஏனைய சமூகத்தவரோடு அவர்கள் சமமான அங்கீகாரம் பெற்று வாழ வாய்ப்பு ஏற்படும். இவ்வருடம் (2023) 'மலையகம் 200' என்ற தொனிப்பொருளில் இடம்பெறும் பன்முக நிகழ்வுகளை ஆவணப்படுத்தி; பாடசாலை, பல்கலைக்கழக கல்வித்திட்டங்களிலும் ஆய்வுகளிலும் அவற்றை உள்வாங்குவதன் மூலம் மலையக மக்களின் மாண்பைப் பேணும் மனநிலை சமூகத்தில் உருவாகும். சுபீட்சமான சமூக உருவாக்கத்தில் கல்வி மிக முக்கிய அங்கம் வகிக்கின்றமையால் மலையக சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்;கு அரசு போதிய உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டும். இலங்கையிலுள்ள சமயங்கள் தன்னுடைய சமூகச் செயற்பாட்டுத் திட்டங்களில் சுவையான தேநீர் கோப்பைக்குள் புதைந்து போயுள்ள மலையக மக்களின் துன்பங்களின் வடுக்களை நீக்கவும் பல சமூகச் செயற்திட்டங்களை முன்னெடுத்தல் சம மாண்பு, உரிமைக்கு வழிவகுக்கும்.