Abstract:
வாழ்க்கையின் பல்வேறுபட்ட அம்சங்களை எடுத்துரைப்பதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகின்றது. சங்கமருவிய காலத்தில் தோற்றம்பெற்ற பதினெண்கீழ்கணக்கு நூல்களில் குறிப்பிடத்தக்க இடம் இந்நூலுக்குண்டு. திருக்குறளைப் போலவே அறம், பொருள், இன்பம் எனும் உறுதிப்பொருட்களைத் தெளிவாக இந்நூல் எடுத்துரைக்கின்றது. சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாக இந்நூல் விளங்குகின்றமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். சிதிலமடைந்த புராதன இனக்குழுச் சமூகமொன்றின் மீள்கட்டுமானத்தில் சங்கமருவிய காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. தனிநபர் குடும்பம் சமுதாயம் எனப் பரிணாம வளர்ச்சியினை அறத்தினை அடிப்படையாகக்கொண்டு கட்டமைக்க இக்கால இலக்கியங்கள் முனைப்புக்காட்டின. வாழ்க்கைக்கு அவசியமான நடத்தைசார் பண்பியல்புகளைப் பல்வேறு வடிவங்களில் அவை வெளிப்படுத்தின. சமுதாய சீர்திருத்தம் கருதிய தன்மையில் தனிநபர் மடைமாற்றச் சிந்தனைகளை இக்கால அற இலக்கியங்கள் பொருண்மையாகக் கொண்டுள்ளன. புராதன இனக்குழுமச் சமுதாய மீள்கட்டுமானத்திற்கு இவ்விலக்கியங்கள் பெருந்துணை புரிந்துள்ளன. இதனைக் கருதுகோளாகக் கொண்டே இந்த ஆய்வு நிகழ்த்தப்படுகின்றது. இதனடிப்படையில் புராதன இனக்குழுமச் சமுதாயமொன்றின் மீளுருவாக்கச் செயற்பாட்டில் நாலடியார் எனும் இலக்கியத்தின் வகிபங்கு எத்தகையது? என்பதனை ஆய்வின் இலக்காகக்கொண்டு இந்த ஆய்வு நிகழ்த்தப்படுகின்றது.