Abstract:
இந்திய மெய்யியற் சிந்தனைகள் மனித விடுதலையை மையப்படுத்திய ஆத்மீகம் சார்ந்தனவாக விளங்குகின்றன. எல்லாவற்றினையும் 'ஏகான்மா' என்ற அடிப்படையில் நோக்குதல் இந்தியத் தரிசனங்களின் பண்பு என்பது இராதகிருஸ்ணன் போன்ற சிந்தனையாளர்களின் கருத்தாகும். இந்திய மெய்யியற் தரிசனங்கள் பெரும்பான்மையும் ஆத்மீக ரீதியான கருத்தியல்களில் கட்டமைக்கப்பட்டிருந்தாலும் அவற்றுள் சமூக ஊடாட்டத்துக்கான ஒழுக்கவியற் சிந்தனைகளையும் உள்ளடக்கியுள்ளன. இத்தகைய சிந்தனைகள் மனிதரை மையப்படுத்தி அவரது வாழ்க்கைக்கூடாக உலகைச் செம்மைசெய்ய முயற்சித்துள்ளன. பொதுவாக ஒழுக்கவியற் சிந்தனைகள் தமது உயிரிலும் உயர்ந்தது என மனிதர் வைத்தெண்ணும் அளவிற்கு அவர்கள் மத்தியில் தாக்கஞ் செலுத்தியுமுள்ளன. இந்திய மெய்யியலில் ஒழுக்க நெறிமுறைகளும் அவற்றிலிருந்து
அவற்றிலிருந்து அமைக்கப்பட்ட கோட்பாடுகளும் மனித நடத்தையின் போக்கைத் தீர்மானிக்கும் வழிமுறைகளாகும். ஒழுக்கமில்லாத மனித நடத்தைகள் கொண்ட வாழ்க்கை சீரற்றதாகவும் நோக்கமற்றதாகவும் காணப்படும் என்பது இத்தரிசனங்களைப் பின்பற்றுபவர்களின் நிலைப்பாடாகும். எனவேதான், இந்திய மெய்யியலில் மனித வாழ்வியல் நோக்கிலும் அதற்கு அப்பாற்பட்ட நிலையிலும் கட்டியெழுப்பப்படும் ஒழுக்கவியற் சிந்தனைகளைத் தரிசனங்களினூடாக எடுத்துரைத்து அவற்றை மீள்வாசிப்பிற்குட்படுத்துவதும் அவசியமாயிற்று. இந்நிலையில் தரிசனங்கள் குறித்து முதன்மைப்படுத்தும் நூல்களை அடிப்படையாகக்கொண்டு ஒழுக்கவியற் சிந்தனைகளை வாழ்வியற் கண்ணோட்டத்திலும் அதற்கு அப்பாற்பட்ட நிலையிலும் நோக்குதல் ஆய்வு முக்கியத்துவமாகும். இவ்வாய்விற்கு வரலாற்று ரீதியான அணுகுமுறை, விபரண அணுகுமுறை மற்றும் விமர்சனப் பகுப்பாய்வுமுறை, ஒப்பியல் அணுகுமுறை என்பன பயன்படுத்தப்படுகின்றன.