Abstract:
நான் யார்? எனும் ஆன்மாவின் வினாவுக்குப் பதில்காணும் முயற்சியாக ஆன்ம விசாரம் அமைகின்றது. தன்னை அறிதலையும், அதன் வழி உண்மைப் பொருளை அறிதலையும் இந்திய தத்துவப் பிரிவுகள் முதன்மைக்குரியனவாக எடுத்தாண்டன. இதுவே ஆன்ம விசாரம் என்றும் பிரம்ம விசாரம் என்றும் அழைக்கப்பட்டது. வைதிக தரிசனங்கள் அனைத்தும் வேத, உபநிடதங்களின் வழிநின்று பிரம்மம், ஆன்மா, உலகு ஆகிய முப்பொருட்களின் உண்மைத் தன்மை குறித்து விளக்கி, வாழும் மானுடர்க்கு ஆன்ம ஞானத்தை வழங்கத் தலைப்பட்டன. இவ் உன்னத பணியில் உபநிடதங்களின் சாரமாக விளங்கும் பகவத்கீதையும், திருமுறைகளுள் ஒன்றான திருமந்திரமும் முதன்மை ஸ்தானத்தைப் பெறுகின்றன. பகவத்கீதை விஷ்ணுவை முழுமுதற் கடவுளாகக்கொண்டு ஆன்மாவின் இருப்பு, இயல்பு, ஆன்மாவுக்கும் பரமாத்மாவுக்குமான தொடர்பு, முத்தி என்பன குறித்த ஆன்ம ஞானத்தை வழங்கி நிற்க. திருமந்திரம் சிவனை முழுமுதற் கடவுளாகக்கொண்டு அவற்றை விளக்குகின்றது. இவ்வாய்வானது பகவத்கீதையையும் திருமந்திரத்தையும் ஆதாரமாகக்கொண்டு அவை தெளிவுபடுத்தி நிற்கும் மெய்பொருள் ஆய்வுகளை ஒப்புநோக்கி ஆன்ம விசாரம் குறித்து பகுப்பாய்வு செய்து அதனூடே அவை விபரித்து நிற்கும் ஆன்ம ஞானத்தைப் புரிந்துகொள்வதற்கான முயற்சியாக அமைகின்றது. ஆன்மா நித்தியமானது என்றும்; ஆன்மாவின் களமாகிய உடல் அழிவுடையது என்றும்; ஆன்மா உணர்வுமயமானது என்றும்; உணர்வுமயமான ஆன்மா தன்னை உணர்வதோடு, தன்னுள் இருக்கும் பரப்பிரம்மனை உணரும்போது அது பிரம்மனாகிறது என்றும்; அதுவே முத்தி என்றும் பகவத்கீதை விளக்கி நிற்கின்றது.ஆன்மா உடலினின்று வேறானது என்றும், உடலின்றி ஆன்மா தனித்து இயங்காது என்றும், பிரம்மத்தைப் போல் ஆன்மா அனாதியானது என்றும், அது மும்மலங்களால் பீடிக்கப்பட்டுள்ளது என்றும், பரம்பொருளின் அருளால் மலங்கள் நீங்கி ஆன்மா தன்னியல்பை அறியும்போது அது தன்னுள் பிரம்மத்தைக் கண்டு சிவப்பேறாகிய பெரும்பயனை அடைந்து பதியுடன் இரண்டறக் கலந்து பேரின்பநிலையாகிய முத்தி நிலையை அடைகிறது என்றும் திருமந்திரம் விளக்கி நிற்கின்றது. எனவே வேத இலக்கியங்களின் மஹாவாக்கியங்கள் சுட்டுவது போன்று 'ஆத்மனும் பிரம்மனும் இரண்டல்ல; ஒன்றே' என்பதனை வலியுறுத்தும் இவ்விரு நூல்களும், முழுமுதற் கடவுள் பற்றிய கருத்தில் வேறுபட்டு நிற்பினும் ஆன்ம விசாரத்தில்