dc.description.abstract |
வவுனியா மாவட்டம் நீர்ப்பாசனத் துறைக்கும் அவற்றை வழங்கும் நீர்ப்பாசனக் குளங்களிற்கும் தனிச் சிறப்புடைய இடமாக திகழ்கிறது. வவுனியா மாவட்டத்தின் பொருளாதார நடவடிக்கைகளில் நீர்ப்பாசனக் குளங்களே பெரிதும் பங்காற்றுகின்றன. ஆனால் நீர்ப்பாசனக் குளங்கள் வினைத் திறனான நீர்ப்பாசனத்தினை வழங்குவதில் பல காரணிகள் சவால்களாக அமைகின்றன. அவற்றுள் குளங்கள் சீராக புனரமைக்கப்படாமையும் முதன்மையான ஒன்றாகும். இதனால் நீர்ப்பாசனத்தினை நம்பிய விவசாயப் பொருளாதாரம் பாதிப்படைகின்றது. இதனடிப்படையில் ஆய்வுப் பிரதேசத்தில் உள்ள புனரமைக்கப்பட்ட குளங்களினை நம்பி பயிர்ச்செய்கையில் ஈடுபடும் மக்களின் வாழ்வாதாரம் உயர்வான நிலையில் அமைவதோடும் புனரமைக்கப்படாத குளங்களை நம்பிய விவசாயிகள் வாழ்வாதாரத்தில் பாரிய பின்னடைவினை எதிர்கொண்டும் வருகின்றனர் இவ் ஆய்வானது ஆய்வுப் பிரதேசத்தில் உள்ள நீர்ப்பாசனக் குளங்களின் இன்றைய நிலையினைக் கண்டறிதல். புனரமைக்கப்படாத குளங்களினால் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்காணல், ஆய்வுப்பகுதியிலுள்ள நீரப்பாசனக் குளங்களினைப் புனரமைப்பதில் தடையாக உள்ள சவால்களினை அடையாளப்படுத்தல், ஆய்வுப் பிரதேசத்திலுள்ள நீர்ப்பாசனக் குளங்களினைப் புனரமைப்புச் செய்வதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் அனுகூலங்களை முன்வைத்தல் போன்ற நோக்கங்களை மையமாகக் கொண்டு நோக்கத்தெரிவு மாதிரி அடிப்படை யில் 16 குளங்கள் தெரிவு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்விற்காக முதல் நிலை. இரண்டாம்நிலைத் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. முதலாம் நிலைத் தரவுகள் மையக்குழுக் கலந்துரையாடல், நேர்காணல், நேரடி அவதானிப்பு மூலம் சேகரிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் நிலைத் தரவுகளாக கமநல சேவைகள் திணைக்கள அறிக்கை, நீர்ப்பாசனத் திணைக்கள அறிக்கை. வவுனியா பிரதேச செயலக மற்றும் மாவட்ட புள்ளிவிபரவியல் அறிக்கை, கமக்கார அமைப்புக்களின் பதிவேடுகள் போன்றவற்றிலிருந்து குளங்கள் தொடர்பான தற்கால அடிப்படை விபரங்கள் மற்றும் ஆய்வுப் பிரதேசம் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டன. பெறப்பட்ட தரவுகள் விபரணப்புள்ளிவிபரவியல் முறை மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டன. இவ் ஆய்வின் பகுப்பாய்வினூடாக புனரமைக்கப்படாத குளங்களினை நம்பிய விவசாயிகள் நீர்ப்பற்றாக்குறை, சிறுபோக நெற்செய்கையை முற்றாக இழந்துள்ளமை, விளைநிலங்கள் கைவிடப்படல், விளைச்சல் குறைவடைதல், உற்பத்திச் செலவிற்கேற்ற வருமானம் கிடைக்காமை. போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்குவதுடன் நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைப்பதற்கு ஆய்வுப்பிரதேசம் நிர்வாக எல்லையாக அமைந்துள்ளமை, இராணுவம், விமானப்படைகளின் கட்டுப்பாடு, நீர்ப்பாசனக் குளங்கள் அளவீடு செய்து எல்லைப்படுத்தப்படாமை, சட்டவிரோத ஆக்கிரமிப்பும் முரண்பாடுகளும் போன்றன பாரிய சவால்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே இங்குள்ள நீரப்பாசனக் குளங்கள் சிறந்த பொறியியற் கட்டமைப்பினை உள்வாங்கி குளத்தொடர்ச்சி முறைகளினைப் பின்பற்றி புனரமைக்கப்படின் மக்களின் வருமானம் உயர்வடைவதுடன் விவசாயப் பொருளாதாரத்திலும் முன்னேற்றம் ஏற்படும். |
en_US |