Abstract:
இலங்கையில் நீண்ட கரையோரங்களைக் கொண்ட மாவட்டங்களுள் திருகோணமலையும் ஒன்றாகும். திருகோணமலை மாவட்டத்தின் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பகுதியினுள் வரும் கேையார வலயமானது அதிக வளங்களை கொண்டு சமூக பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் பெற்றுக் காணப்படுகின்ற போதிலும் இயற்கை மற்றும் மானுட நடவடிக்கைகள் இக் கரையோர வலயத்தின் அச்சுறுத்தலுக்கு காரணமாகின்றன. இவ்வாறானதொரு நிலைமை தொடர்ச்சியாக காணப்படுமானால் குறித்த கரையோர வலயம் அதன் முக்கியத்துவத்தையும் தனித்துவத்தையும் இழக்க நேரிடுவதுடன் சூழல் சமூக மற்றும் பொருளாதார ரீதியான பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டி ஏற்படும். கரையோர முகாமைத்துவம் தொடர்பான நடவடிக்கைகள் இக் கரையோர வலயத்தில் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் அவற்றில் உள்ள குறைபாடுகள் காரணமாக நீண்டகால பயன்பாட்டை கொண்டனவாகக் காணப்படவில்லை. கரையோர வலயம் இவ்வாறு தொடர்ச்சியாக சீர்குலைந்து வருவதனால் ஒழுங்கான முகாமைத்துவச் செயன்முறைகளை திட்டமிட வேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளது. அந்த வகையில் இவ் ஆய்வானது திருகோணமலை மாவட்ட பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவின் கரையோர வலய முகாமைத்துவம் எனும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கரையோர மாசாக்கத்துக்கான காரணங்களை கண்டறிதல். கரையோர அரிப்பினால் ஏற்பட்டுள்ள மாற்றங் களை படமாக்குதல், கரையோரப் பாதிப்புக்களை குறைப்பதற்கு பொருத்தமான முகாமைத்துவ நடவடிக்கைகளை முன்வைத்தல் என்பன ஆய்வின் நோக்கங்களாக அமைந்துள்ளன. இவ் ஆய்வின் முதலாம் நிலைத் தரவுகள், குறித்த பகுதியில் மேற்கொண்ட நேரடி அவதானம், கலந்துரையாடல், வினாக்கொத்து என்பவற்றினூடாக பெறப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட தரவுகள் புள்ளிவிபர பகுப்பாய்வு மற்றும் GIS பகுப்பாய்வுக்கு உட்படுத்தி முடிவுகள் பெறப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவுகளாக பட்டினமும் சூழலும் பிரதேச கரையோர வலயம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் முகாமைத்துவத்தின் தற்போதய நிலைகளும் அதனால் ஏற்பட்டுள்ள கரையோரம் சார் பாதிப்புக்களும் உறுதிசெய்யப்பட்டு பாதிப்புக்களை குறைப்பதற்காக. வினைத்திறனான முகாமைத்துவ நடவடிக்கைகள் பரிந்துரைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன