dc.description.abstract |
உலக நாடுகளில் வறுமை என்பது ஒரு பெரிய சவாலாகக் காணப்படுகின்றது. இலங்கையிலும் வறுமை தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருவதனால் வறுமை ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் பல காலம் காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு இலங்கையில் வறுமை ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டங்களில் முக்கிய அங்கமாகக் காணப்படுவது சமுர்த்தி நிகழ்ச்சித் திட்டம் ஆகும். வவுனியா மாவட்டத்தில் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படுகின்ற மருதங்குளம் கிராம சேவகர் பிரிவில் வறுமைப்பட்டவர்கள் அதிகமாகக் காணப்படுகின்றார்கள். அதனடிப்படையில் "2010 ஆம் ஆண்டின் பின்னர் மக்களின் வாழ்வாதார அபிவிருத்தியில் சமுர்த்தித் திட்டத்தின் பங்களிப்பு: வவுனியா மாவட்டத்தின் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் மருதங்குளம் கிராம சேவகர் பிரிவினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு." என்கின்ற இந்த ஆய்வானது மருதங்குளம் கிராம சேவகர் பிரிவினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுப் பிரதேசத்தில் உள்ள 326 குடும்பங்கில் 167 குடும்பங்கள் அதாவது 52% ஆனவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்களாகவும் இவர்கள் சமுர்த்தி நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் உதவிகளைப் பெறும் பயனாளிகளாகவும் காணப்படுவதுடன் பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் எதிர்கொள்கின்றார்கள். இந்த ஆய்வானது மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் ஆய்வுப் பிரதேசத்திற்கு சமுர்த்தி நிகழ்ச்சித் திட்டத்தினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகளினை இனங்காணுதல், வாழ்வாதார உதவிகள் மக்களின் வாழ்வாதார அபிவிருத்தியில் எவ்வாறான பங்களிப்பினை செய்துள்ளது என்பதனைக் கண்டறிதல், சமுர்த்தி மக்கள் எதிர்நோக்கும் சவால்களினை இனங் காணுவதுடன் அவற்றுக்கான பரிந்துரைகளையும் முன்வைத்தல் என்கின்ற மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வினை மேற்கொள்வதற்காக ஆய்வாளனால் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. முதலாம் நிலைத் தரவுகளாக நேர்காணல், இலக்குக்குழுக் கலந்துரையாடல், நேரடி அவதானிப்பு மற்றும் வினாக் கொத்து போன்றவற்றின் மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டன. இத் தரவுகள் சமுர்த்திப் பயனாளிகளிடையேயும், கிராமசேவகர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் போன்றவர்களிடமும் அத்துடன் இலக்குக் குழு கலந்துரையாடல் மூலம் சமுர்த்தி நிகழ்ச்சித் திட்டம் மூலம் கடன் உதவி பெறும் 84 பயனாளிகளிடம் இருந்தும் தரவுகள் சேகரிக்கப்பட்டன. இரண்டாம் நிலை தரவுகளானவை கிராமசேவையாளர் அறிக்கை, சமுர்த்தி செயலாற்று அறிக்கை, வவுனியா மாவட்ட புள்ளிவிபரக் கையேடு, வவுனியா மாவட்ட சமுர்த்தி நிகழ்ச்சித்திட்ட அறிக்கைகள் என்பவற்றின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டன. இவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்ட முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகளானவை விபரணப் பகுப்பாய்வு மற்றும் பண்புசார் பகுப்பாய்வு முறைகளுக்கு உட்படுத்தப்பட்டது. Excel மென்பொருளில் உட்செலுத்தி அதன் மூலம் முடிவுகளானவை அட்டவணைகள் மற்றும் வரைபடங்கள் அடிப்படையிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி ஆய்வுப் பிரதேச மக்களுக்கு சமுர்த்தி நிகழ்ச்சித் திட்டம் மூலம் வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டாலும் சமுர்த்திப் பயனாளிகள் பல்வேறுபட்ட சவால்களினை எதிர்கொள்கின்றார்கள். அந்தவகையில் சமுர்த்தி மூலம் வழங்கப்படுகின்ற கொடுப்பனவு தொகை போதாமையாக உள்ளமை, சமுர்த்திப் பயனாளிகளின் தேவைகளினை நிறைவேற்றிக்கொள்ள நிரந்தரமான சமுர்த்தி உத்தியோகத்தர் இன்மை, மக்களுக்கு சமுர்த்தித் திட்டம் பற்றிய போதிய தெளிவின்மை, தொடர்ச்சியான வருமானம் பெற்றுக் கொள்ளும் தொழில் வாய்ப்பின்மை போன்ற பல பிரச்சினைகள் ஆய்வுப் பிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ளன. இவ்வாறாக காணப்படும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கொடுப்பனவினை வழங்குதல், தொழில் கருத்திட்டங்களுக்கு ஏற்ப நுண் கடன்களினை வழங்குதல், சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை நிரந்தரமாக நியமித்தல், சமுர்த்தி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக மக்களுக்கு அறிவூட்டுதல் போன்ற பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |