Abstract:
மக்களுடைய வாழ்க்கையில் வாழ்வாதாரம் ஆனது இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகின்றது. அந்த வகையில் வாழ்வாதாரம் மக்களிடையே பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் தோற்றுவிக்கின்றது. அந்தவகையில் ஆய்வுப் பிரதேசத்தில் "கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச செயலகப் பிரிவின் மட்டுவில் நாடு மேற்குக் கிராம சேவகர் பிரிவில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தில் மீள்குடியமர்வின் பின்னர் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பு" என்ற தலைப்பானது ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் வாழ்வாதாரங்கள் மக்களுடைய நிறைவு வாழ்க்கைக்கும், சமுதாய வாழ்க்கைக்கும் அடித்தளமாக காணப்படுகின்றது. ஆய்வு பிரதேசத்தில் 2010 ஆம் ஆண்டிற்குப் பின்னரான மீள்குடியமர்வு பின்னர் குறிப்பிடத்தக்களவு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவிகள் வழங்கப்பட்டன. உதவி திட்டங்கள் மூலம் பல்வேறு குடும்பங்கள் தமது பொருளாதார நிலையை மேம்படுத்தி உள்ளனர். மேலும் பல குடும்பங்கள் சரியான முறையில் அவற்றிலிருந்து பயன் பெற்றுக் கொள்ளவில்லை. இதனைவிட வாழ்வாதார உதவிகளை வழங்குவதில் காணப்படுகின்ற குறைகளாக பயனாளர் தெரிவு காணப்படுகின்றது. குறிப்பாக வீட்டுத்திட்டம் சமுர்த்தி பயனாளர் தெரிவு, வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்குவதில் பயனாளர்களைத் தெரிவு செய்வதில் பாரிய குறைகள் காணப்படுகின்றன. இதில் தனிமனித செல்வாக்குக் காணப்படுகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகள் கிடைக்கப் பெறவில்லை. இவ்வாய்வில் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் முதல் நிலைத் தரவாக வினாக்கொத்து ஆய்வு, கலந்துரையாடல் முறைமையும் தரவுகளாக புள்ளிவிபரவியல் அறிக்கைகள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் போன்றன பயன்படுத்தப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வு பிரதேசத்தில் உள்ள 254 குடும்பங்களில் இருந்து 30 சதவீதமான மாதிரிகள் பெறப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெறப்பட்ட தரவுகள் Excel நுட்பமுறை மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் அட்டவணைகள் வரைபடங்களாகக் காட்டப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் ஆய்வுப் பிரதேசத்தில வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள் தொடர்பான தரவுகள் மற்றும் வாழ்வாதாரம் தொடர்பாக காணப்படும் பிரச்சினைகள் காட்டப்பட்டுள்ளன. முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகளைப் பயன்படுத்தி புள்ளிவிபரவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி வாழ்வாதாரம் தொடர்பாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களுடைய வாழ்வாதார உதவிகள் பற்றிய விவரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு ஆய்வின் முடிவாக வாழ்வாதாரத்தில் குறிப்பிட்ட மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அதற்கான வாய்ப்புகள் பரிந்துரைகள், தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் ஆய்வுப் பிரதேசத்தில் வாழ்வாதாரங்களைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் பிரச்சினைகளுக்குப் பரிந்துரைகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். நேரடியான கள் ஆய்வில் கிராம அலுவலர், பொருளாதார உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் ஈடுபட வேண்டும். உதவித்திட்டங்கள் வழங்கப்படும்போது தெரிவுகள் நேர்மையான முறையில் இடம்பெற வேண்டும். எவ்விதமான பக்கச்சார்பும் இருக்கக்கூடாது. வழங்கப்படும் வாழ்வாதார உதவித்திட்டங்கள் பொருத்தமான முறையில் பயன்படுத்தப்படுகின்றதா என்பதனையும் அதன் மூலம் பயனாளர்கள் பயனடைகின்றனரா என்பதையும் நேரடி அவதானத்தின் மூலம் கண்காணிக்க வேண்டும். பயனாளர் தெரிவு தொடர்பாகக் காணப்படும் முறைகேடுகளுக்குப் பொருத்தமான நுட்பம் ஒன்று கையாளப்பட்டுத் தெரிவு இடம்பெற வேண்டும். ஆய்வு பிரதேசத்திற்குப் பொருத்தமான உதவித் திட்டங்கள் வழங்கப்பட வேண்டும். எனவே ஆய்வு பிரதேசத்தில் சாதகமான ஒரு வாழ்வாதார உதவிகளையும் மற்றும் அதற்கான மக்களின் வாழ்க்கைக்கான வழிமுறைகளையும் ஆய்வானது பரிந்துரை செய்கின்றது.