dc.description.abstract |
இலங்கையின் அபிவிருத்தியில் விவசாயத்துறைக்கு பாரிய பங்கு உண்டு. நாட்டின் மொத்த உற்பத்தி வருமானத்தில் விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானமும் ஒன்றாகும். 2050 ஆம் ஆண்டுக்குள் 9.7 பில்லியன் மக்களுக்கு உணவளிப்பதற்கும், தீவிர வறுமை முடிவுக்கு வருவதற்கும், விவசாய வளர்ச்சியானது மிகவும் சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாக காணப்படும். இலங்கை விவசாயப் பொருளாதாரத்திலேயே தங்கியுள்ளது. பொலன்னறுவை, திருகோணமலை போன்றவாறான மாவட்டங்களில் மூன்று போக பயிர்செய்கையும் கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்றவாறான மாவட்டங்களில் இரண்டு போக பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்படுகிறது. இலங்கையில் மாறுபட்ட வேளாண்மை காலநிலைப்பகுதிகளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் செய்கை பண்ணப்படுகின்றன. இம் மேலதிக உணவுப்பயிர்களை பிரதானமாக நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். வனத்தானியங்களாக குரக்கனையும், சோளத்ததையும் அவரைப்பயிர்களாக பாசிப்பயறு, கௌபீ, உழுந்து ஆகியவற்றையும் சரக்குப் பயிர்களாக வெங்காயம், மிளகாய், எண்ணெய்ப் பயிர்களாக நிலக்கடலை, எள்ளு ஆகியனவும் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இவ்வாறான விவசாய நாட்டில் வடமாகாணத்தின் மத்தியில் அமைந்திருக்கும் கிளிநொச்சி மாவட்டமானது விவசாயத்தில் பெரும் விளைச்சலை தரக்கூடிய மாவட்டங்களில் ஒன்றாக அங்கம் வகிக்கிறது. இம் மாவட்டத்தில் உள்ள கரைச்சிப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மேட்டு நில பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகள் பல்வேறு பௌதீக, சமூக, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்ளுகின்றனர். இதனடிப்படையில் ஆய்வுப்பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட பிரச்சினையாக நெற்பயிர்ச்செய்கைகளுடன் ஒப்பிடுகையில் குறித்த பிரதேசத்தில் மேட்டுநிலப் பயிர்களின் உற்பத்தி குறைவடைந்துள்ளது என்பதாகும். இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வானது கரைச்சிப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கமநல சேவை நிலையங்களின் கீழ் மேட்டுநிலப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளை அடையாளப்படுத்தல் மற்றும் மேற்கொள்ளும் பயிர்களை வகைப்படுத்தல், மேட்டுநில பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்காணல், பிரச்சினைக்கான தீர்வுகளை முன் வைத்தல் போன்றனவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆய்வின் பிரச்சினையை அடையாளம் காண்பதற்காக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மேட்டுநில விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் யாவை? பிரச்சினைகளை தீர்ப்பதற்கான உபாயங்கள் எவை? போன்ற ஆய்வு வினாக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வுக்கான தரவுகள் முதலாம், இரண்டாம் நிலைத் தரவு மூலகங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன. முதலாம் நிலைத்தரவுகள் கலந்துரையாடல், வினாக்கொத்து முறை, நேரடி அவதானிப்பு என்பவற்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் இரண்டாம்நிலைத் தரவுகளுக்காக இணையத்தளத் தகவல்கள், பிரதேச செயலக அறிக்கைகள், விவசாயத் திணைக்கள புள்ளிவிபரக் கையேடுகள் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனடிப்படையில் குறித்த ஆய்வு விபரணபுள்ளிவிபரவியல் முறைமை மற்றும் புள்ளிவிபரவியல் (Excel) நுட்ப முறைகளை பின்பற்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுப்பிரதேசத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சினைகளில் இரசாயன கிருமிநாசினி மற்றும் உரங்களின் விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு, விவசாயிகள் திட்டமிட்ட முறையில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. போன்றவாறான பிரச்சினைகள் அடையாளப்படுத்தப்பட்டு அவற்றிற்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் விவசாய மையங்கள், விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், குழுக்கள், கூட்டுறவு நிறுவனங்கள் உழவர் நிறுவனங்கள் போன்றவற்றின் வலுவான வலையமைப்பை நிறுவுதல். கைத்தொழில் வலயங்களை நிறுவுதல் உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கும் வள உற்பத்தித்திறன் மற்றும் இலாபத்தை மேம்படுத்துவதற்கும் மலிவு விலையில் விவசாயிகள் புதிய தொழில்நுட்பத்தை அணுகுவதை உறுதி செய்வதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்குதல், நியாயமான விலையில் வழங்கப்பட்ட பொருத்தமான தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைந்தளவான உள்ளீடுகளைப் பயன்படுத்தி அதிகளவான உற்பத்தியைத் தரக்கூடிய அளவீட்டை ஏற்றுக்கொள்ளல் போன்ற எதிர்காலச் செயற்பாடுகள் மூலம் இப்பிரதேசத்தில் உற்பத்தியை அதிகரிக்க முடியும். |
en_US |