dc.description.abstract |
குடியிருப்புக்களைப் பொறுத்தவரை சிக்கலான சூழல் நிலைமைகளிலிருந்து பாதுகாப்பைப் பெறவும், மிருகங்ககளிடமிருந்து பாதுகாப்புப் பெறவும் மனிதர்கள் வீடுகளை அமைத்துக் கொண்டனர். அந்தவகையில் இலங்கையைப் பொறுத்தவரை குடியிருப்புக்களாக கிராமிய குடியிருப்பு,நகர குடியிருப்பு, தோட்டக் குடியிருப்பு என்று வகைப்படுத்திக் காணப்படுகின்றன. இலங்கையின் மத்திய மாகாணத்தை உள்ளடக்கிய மலையகப் பகுதியானது, குடியிருப்புச் சார்ந்த எவ்வித அபிவிருத்தியும் அடையாத நிலையில் உள்ளது. அதிலும் தோட்டக் குடியிருப்புக்களைப் பொறுத்தவரை இன்றும் லயன் குடியிருப்புக்கள் மாற்றப்படாமல், குடியிருப்புச் சார்ந்து பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றன. இப்பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா மவுசாகலை நீர்த்தேக்கத்திற்கு அருகில் வாழ்கின்ற மக்களின் குடியிருப்பு சார்ந்த பிரச்சினைகள் என்ற ஆய்வு தலைப்பின் கீழ் இந்த ஆய்வானது மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வுப் பிரதேசமான, பிரோன்லோவ் தோட்டக் குடியிருப்பு சார்ந்த பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரல், மற்றும் ஆய்வு பிரதேச மக்கள் குடியிருப்பு சார்ந்த பிரச்சினைகளினால் எதிர்நோக்கும் சவால்களை அடையாளப்படுத்தல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது. ஆய்விற்காக முதன்நிலை மற்றும் இரண்டாம்நிலைத் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. முதன் நிலைத்தரவு முறைகளில் முதலாவதாக குறித்த குடியிருப்பு பிரதேசமானது நேரடி அவதானத்தின் மூலம் அவதானிக்கப்பட்டது. இதில் பிரதேசத்தின் வீதிப் போக்குவரத்து, சுகாதார வசதி, குடியிருப்பின் கட்டமைப்பு போன்றன அவதானிக்கப்பட்டன. அடுத்ததாக குடியிருப்புப் பிரதேசத்தின் 30% மாதிரிகளாக வினாக்கொத்தானது(182) ஆய்வு பிரதேசத்தில் உள்ள மக்களிற்கு எழுமாற்று ரீதியாக குடும்பங்களைத் தெரிவு செய்து வினாக்கொத்துகள் வழங்கப்பட்டன. அடுத்ததாக தோட்டத்தலை நேர்காணல் நடைபெற்றதன் மூலம் பிரதேசத்தில் அதிகமாக குடியிருப்பு சார்ந்த பிரச்சினைகளில் உள்ளவர்களின் விபரங்கள் பெறப்பட்டன. இரண்டாம்நிலைத் தரவுகளாக கிராம சேவையாளரின் புள்ளிவிபர அறிக்கை, பிரதேச செயலக அறிக்கை, இணையத்தளம், பத்திரிக்கை, ஆகியவற்றில் இருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. பெறப்பட்டதரவுகள் கணணி உள்ளீடு (Excel) செய்யப்பட்டு விபரணப்புள்ளிவிபரவியல்ப் பகுப்பாய்வு ஊடாக முடிவுகள் யாவும் அட்டவணைகள், வரைபுகள் என்பன மூலம் வெளிக்கொண்டு வரப்பட்டன. இதனடிப்படையில் பிரோன்லோவ் தோட்டக் குடியிருப்பு சார்ந்த பிரச்சினைகளான குடியிருப்பு பரம்பலில் உள்ள பிரச்சினைகள், நீர் பிரச்சினை, மலசலக்கூட வசதியின்மை, கல்வி ரீதியான பிரச்சினைகள், தொழிலினை பெற்றுக்கொள்ளுவதில் உள்ள பிரச்சினைகள், வீதி போக்குவரத்து, சுகாதாரப் பிரச்சினை, நீர்த்தேக்கத்தினால் ஏற்படும் பிரச்சினைகள் போன்றன வெளிக்கொண்டு வரப்பட்டதுடன், அம்மக்கள் குடியிருப்பு சார்ந்த பிரச்சினையினால் எதிர்கொள்ளும் சவால்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படாமல் தடுப்பதற்காக குடியிருப்புக்கான உதவி வகைகளை ஏற்படுத்திக் கொடுத்தல், குடியிருப்புக்கான வீதி வசதியை செய்துக்கொடுத்தல், குடியிருப்பு பிரதேசத்திற்குரிய பாடசாலை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான வசதியை செய்துக் கொடுத்தல், பிரதேசத்திற்குரிய சுகாதார வசதியை மற்றும் வைத்தியசாலை வசதியை பெற்றுக்கொடுத்தல், பிரதேச மக்களுக்கு பிரதேசத்திற்குள்ளேயே தொழில்வாய்ப்பினை ஏற்ப்படுத்திக் கொடுத்தல், நீர் வசதியை மேம்படுத்திக் கொடுத்தல், நீர்த்தேக்கத்தினால் பாதிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் உள்ள மக்களுக்கு நிலையான குடியிருப்பு வசதியை ஏற்ப்படுத்திக் கொடுத்தல், மலசலக்கூட வசதி இல்லாத மக்களுக்கு மலசலக்கூட வசதியை பெற்றுக்கொடுத்தல் போன்ற தீர்வுகளும் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |