dc.description.abstract |
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் ஒன்றான இலங்கை ஒரு விவசாய நாடாகவும் வாசனைத்திரவியங்களின் வர்த்தக மையமாகவும் விளங்குகின்றது. இலங்கையின் விவசாயத்துறையில் பெருந்தோட்டத்துறை பிரதான அங்கம் வகிக்கும் அதேவேளை சிறு ஏற்றுமதி பயிர்ச்செய்கையானது நாட்டிற்கு அந்நிய செலவாணியை ஈட்டித்தருவதுடன் மக்களின் வாழ்வாதாரத்திலும் பிரதான பங்களிப்பினையும் வழங்குகின்றது. அந்த வகையில் சிறு ஏற்றுமதி பயிர்களில் மிளகு, கராம்பு, ஏலக்காய், சாதிக்காய் போன்றன மருத்துவ குணமுள்ளவையாகவும் வாசனைத்திரவியங்களாகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த ஆய்வின் நோக்கங்களாக சிறு ஏற்றுமதிப் பயிர்களை அடையாளப்படுத்துதல், சிறு ஏற்றுமதி பயிர்களின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கண்டறிதல். மற்றும் சிறு ஏற்றுமதிப் பயிர்களின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கான காரணங்களை முன்வைத்தல் என்பன உள்ளன. ஆய்வுப்பிரதேசமான மத்திய மாகாண கண்டி மாவட்டத்தின் குண்டசாலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மெனிகின்ன கமநலசேவை நிலையத்தில் வசதி மாதிரிஎடுப்பு முறையில் 10 வருடத்திற்கும் அதிகமாக பரந்தளவில் சிறு ஏற்றுமதி பயிர்செய்கையினை மேற்கொள்ளும் பதிவு செய்யப்பட்ட சிறு ஏற்றுமதி பயிர்ச்செய்கையாளர்களினை முழுக்குடித்தொகையாகக் கொண்டு ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்விற்காக பதிவுச் செய்யப்பட்ட பயிர்ச்செய்கையாளர்களிடம் கட்டமைக்கப்படாத வினாக்கொத்து ஊடாகவும் மற்றும் சிறு ஏற்றுமதி கமநலசேவை நிலைய கள உத்தியோகத்தரிடம் கலந்துரையாடல் ஊடாகவும் முதலாம் நிலைத்தரவுகள் சேகரிக்கப்பட்டன. மேலும் ஏற்றுமதி விவசாயத் திணைக்கள அறிக்கைகள், பிரதேச கமநலசேவை நிலைய அறிக்கைகள், பயிர்க்குறிப்பேடுகள் மூலமாக இரண்டாம் நிலைத்தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக சேகரிக்கப்பட்ட தரவுகள் விபரண புள்ளிவிபரவியல் பகுப்பாய்வு முறைக்கு உட்படுத்தப்பட்டு, சிறு ஏற்றுமதி பயிர்ச்செய்கையின் உற்பத்தியானது ஆரம்பகாலங்களில் அதிகளவில் காணப்பட்ட போதிலும் கடந்த மூன்று வருடங்களாக சிறு ஏற்றுமதி பயிர்களின் உற்பத்தியின் அளவு வீழ்ச்சி கண்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு சிறு ஏற்றுமதி பயிர்களில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மாற்றத்தினை கண்டறிந்து வீழ்ச்சியடைந்துள்ளமைக்கான காரணங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த மூன்று வருடங்களில் சிறு ஏற்றுமதி பயிர்ச்செய்கையாளர்களுக்கு சிறு ஏற்றுமதி பயிர்களிலிருந்து எதிர்பார்த்த வருமானமின்மை, சந்தையில் காணப்படும் விலைத்தளம்பல், எதிர்காலச் சந்ததியினர் விவசாயத்தில் ஈடுபட விருப்பமின்மை,சிறு ஏற்றுமதி பயிர்களுக்கு ஏற்படும் நோய்த்தாக்கங்கள், பொருளாதார ரீதியாக பயிர்ச்செய்கையாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் காலநிலைசார் இடர்கள் என்பன காரணங்களாக அடையாளப்படுத்தப்பட்டன. இவ்வாறாக அடையாளப்படுத்தப்பட்ட பிரதான பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. சிறு ஏற்றுமதி பயிர்ச்செய்கையினை மேம்படுத்துவதற்காக அரசு விவசாயத் திணைக்களங்களினூடாக ஒவ்வொரு கமநலசேவை நிலையத்திற்குட்பட்ட பகுதிகளிலும் பயிர்ச்செய்கையாளர்களுக்கு சிறு ஏற்றுமதி பயிர்கள் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்துதல், பயிர்ச்செய்கையாளர்களின் நிலப்பரப்பிற்கு போதுமானளவு மானியங்களை தொடர்ச்சியாக வழங்குதல் ஊடாக சிறு ஏற்றுமதி பயிர்களின் உற்பத்தியானது உயர்வடையும். |
en_US |