Abstract:
பொறுப்புக்கூறல் என்பது ஒரு செயற்பாட்டாளர் தன்னுடைய செயல்கள், தீர்மானங்கள் குறித்து ஏனையவர்களுக்கு பதிலளிக்கும் அல்லது நியாயப்படுத்தும் கடமை உள்ளதாக உணருகின்ற ஒரு சமூக உறவாகும். அண்மைக்காலமாக இப்பொறுப்புக்கூறல் அரசியல். சமூக, பொருளாதார, பொது மற்றும் தனியார் துறைகளில் அதிக முக்கியத்துவப்படுத்தப்பட்டு பேசப்படுகின்ற விடயமாகவும் காணப்படுகின்றது. இந்த ஆய்வானது பொதுநிறுவனங்களின் பொறுப்புக்கூறல் செயன்முறையைப் பற்றியதாகக் காணப்படுவதுடன்அது குறித்த முன்னைய ஆய்வுகளை மீளாய்வுக்குட்படுத்துவதாகவும் அது தொடர்பான பல்வேறுபட்ட கருத்துக்களையும் வெளிக்கொணர்கின்றது. அத்துடன் பொறுப்புக்கூறல் சம்பந்தமான அடிப்படையான விடயங்களைப் பற்றியும் இலங்கை பொதுநிறுவனங்களின் பொறுப்புக்கூறல் செயன்முறை எவ்வாறு காணப்படுகின்றது என்பது பற்றியும் இம்முன்னைய ஆய்வுகளின் மீளாய்வினூ டாகப் பரிசீலிக்க முற்படுகின்றது. இதன்மூலம் இலங்கை பொதுநிறுவனங்களில் பின்பற்றப்படும் பொறுப்புக்கூறல் செயன்முறை குறித்ததான ஆய்வுகளிலுள்ள இடைவெளிகளை இனங்காண்பதே இவ்வாய்வின் நோக்கமாகும். அந்தவகையில் இவ்வாய்வானது பண்புரீதியான முறையியலின் அடிப்படையில் விபரணப் பகுப்பாய்வினூடாக மேற்கொள்ளப்படுகின்றது. இதற்காக இரண்டாம் நிலைத் தரவுமூலங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனடிப்படையில் பொறுப்புக்கூறல் பற்றிய முன்னைய ஆய்வுகளை கோட்பாடு மற்றும் நடைமுறை சார்ந்த இலக்கியங்கள், உலகளாவிய மற்றும் இலங்கையுடன் தொடர்புடைய இலக்கியங்கள் என்ற அடிப்படையில் மீளாய்விற்குட்படுத்துகின்றது. அந்தவகையில் பொறுப்புக்கூறல், அதன் வகைகள், பல்வேறுபட்ட பொறுப்புக்கூறல் செயன்முறைகள் இம்மீளாய்வினூடாக இனங்காணப்பட்டுள்ள போதிலும் இலங்கையுடன் தொடர்புபடுத்தி நோக்க முற்படும்போது இது தொடர்பான ஆய்வுகள் அரிதாகக் காணப்படுவதுடன் சில குறிப்பிட்ட துறைகளுடன் வரையறுக்கப்பட்டதாகவும் உள்ளன. மேலும் வெளிப்படைத்தன்மை, நல்லாட்சி போன்ற விடயங்களுடன் இணைத்தாகவும் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் பொறுப்புக்கூறல் செயன்முறையினை முறையாக செயற்படுத்துவதிலும் பல்வேறு காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன என்பது இவ்வாய்வின் முடிவாகும்.