Abstract:
இலங்கையின் கல்வி சீர்திருத்தமென்பது காலநிலை மாற்றம் போன்றது. சுதந்திர இலங்கையிலேயே பல கல்விக் கொள்கைகள் முன்மொழியப்பட்டு அமுல்படுத்தல் முழுமை பெற முன்பு மறு கல்வி சீர்திருத்தத்தை மேற்கொள்ளும் அரசாங்கங்கள் ஆட்சிக்கு வருகின்றன. இதில் வடக்குக் கிழக்கு இனமுரண்பாட்டினால் தெளிவான உறவைத் தென்இலங்கையுடன் கொண்டிருக்காமையினால் அதிக பாதிப்புக்களை எதிர்நோக்கியது. இது போரினால் மேலும் விரிவடைந்ததுடன் தமிழ் - சிங்கள கல்வி உறவும் பாதிப்புக்குள்ளாகியது. இந்நிலையில் 1997 களில் அறிமுகமான புதிய கல்விச்சாதிருத்தம் வடக்கு கிழக்குக்கு காலம்தாழ்த்தியே அறிமுகமானது. இப்புதிய கல்விக்கொள்கைகள் வளர்ச்சியடைந்த நாடுகளில் அமுல்படுத்தப்பட்ட பாணியில் இலங்கையிலும் அமுல்படுத்தப்பட்டது. ஆனால் வடக்கு கிழக்கில் புதிய கல்விச் சீர்திருத்தத்திற்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுத்ததாக கருத முடியாது. போர் ஒரு காரணமாக கூறப்பட்டு வந்தாலும் போரிற்குப் பின்பு ஏற்பட்டுள்ள தற்கால அமைதியிலாவது முழுமையான அமுல்படுத்தலுக்கான தயார்படுத்தலை அரசாங்கங்கள் செய்துள்ளதா என்பது ஆய்வுக்குரிய அம்சம்.
இலங்கையின் கல்வி பிரயோகத்தில் மத்திய அரசின் பாடசாலைகள், மாகாண சபையின் பாடசாலைகள் என இரண்டாக வகைப்படுத்திய நிர்வாகம் காணப்படுகின்றது. குறிப்பாக தேசியப்பாடசாலைகள் (National School) மத்திய அரசின் கண்காணிப்பிலும் இதர பாடசாலைகள் மாகாண சபையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குவதுடன் தனியார் பாடசாலைகளும் தனித்துவமான பங்கினை வகிக்கின்றது. வடக்கு கிழ்க்கில் 38 தேசியப் பாடசாலைகளும், 1941 மாகாணப் பாடசாலைகளும், 06 தனியார் பாடசாலையுமாக 1985 பாடசாலைகள் காணப்படுகின்றன. (Statistical information ; 2004) ஏறக்குறைய 623843 மாணவர்கள் 2003இல் கல்வி கற்றதோடு 25676 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எண்ணிக்கை காணப்படுகின்றது.