Abstract:
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டு 'அணு யுகம்' என்று அழைக்கப்படுகின்றது. இன்று மனித நாகரிகமானது உச்சக் கட்டத்தினை அடைந்துள்ள நிலையில் அதன் பெறுபேறாகவே அணுசக்தி நோக்கப்படுகின்றது. உலக அரசியலின் தீர்மானிப்பாளனாக மாறியுள்ள அணுசக்தியானது, அரசுகளின் வளர்ச்சியையும் தீர்மானிக்க வல்லதாகவுள்ளது. அணுசக்தியினை உலக அரசுகள் இருவேறுபட்ட தேவைகளிற்காகப் பயன்படுத்த முற்படுகின்றன. சிவில் தேவைக்கானது மற்றும் இராணுவ பாதுகாப்புத் தேவைக்கானது அடையாளப்படுத்த முடியும். உண்மையிலே மேற்குறிப்பிட்ட இரண்டாவது தேவையே உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. புவியினை 12 முறைக்கு மேல் முற்றாக அழிக்கவல்ல 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் உலக அரசுகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலே உலகில் பரவலடைந்து வருகின்ற அணுசக்தி கலாசாரம் தெற்காசியாவினையும் அதிக அச்சுறுத்தலை தருகிறது. தெற்காசியப் பிராந்தியத்தினை சார்ந்த இந்தியாவின் இராணுவ, பொருளாதார, சமூக முறைமைகளில் முன்னேற்றம் அடைவதற்கு காரணமாக அணுசக்தி அமைந்துள்ளது. இதன்மூலம் இன்று முதன்மைமிக்க அணுசக்தி கையாட்சி அரசாக மாறியுள்ளது. 1948இல் அணுசக்தி கமிஷன் நிறுவியது. 1969 ஏப்ரல் 01இல் முதலாவது அணுமின் நிலையம் உருவாக்கப்பட்டதனைத் தொடர்ந்து இந்தியா அணுசக்திப் பயன்பாட்டினை உடைய அரசாக 1974இல் உருவெடுத்தது. பொக்ரான் பாலைவனத்தில் அணுகுண்டுப் பரிசோதனையினை முதன்முதலில் மேற்கொண்டு 'அமைதிக்கான அணுத்திட்டம்' எனும் பெயரில் அணுஆயுதக் கட்டமைப்பு அரசாகவும் தன்னை மாற்றிக் கொண்டது. இவ்வாய்வின் நோக்கமாக இந்தியாவினை அடிப்படையாகக் கொண்டு அணுசக்தி அரசியலினை விளங்கிக் கொள்ளல் அமைந்துள்ளது. இவ்வாய்விற்கான அணுகுமுறையானது இரண்டாம் நிலைத் தரவுகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் நூல்கள், கட்டுரைகள், சஞ்சிகைகள், விமர்சனங்கள, இணையத்தளங்கள் மற்றும் பத்திரிகைகள் ஊடாகத் தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இன்று உலகின் முக்கிய விடயமாகவும் உலக அரசுகளின் அரசியலினைத் தீர்மானிப்பதாகவும் இவ் அணுசக்தி காணப்படும் நிலையில் இந்தியா தன்னையும் அத்தகைய பட்டியலில் இணைத்துக் கொண்டுள்ளது. இதனடிப்படையில் தன்னைச் சுற்றி எல்லை மற்றும் பிராந்திய ஆதிக்கப் போட்டி கொண்ட இவ்வரசானது அச்செயற்பாடுகளிற்கு அணு ஆயுதத்தினைப் பயன்படுத்துமா அல்லது சீனா, பாகிஸ்தான் போன்ற அரசுகள் இந்தியா மீது பயன்படுத்துமா? எனும் கேள்வியுடன் கூடிய போட்டி உள்ளது. மேலும், அணுசக்தியினை மையப்படுத்தி அமெரிக்கா போன்ற அரசுகளின் இந்தியா மீதான ஆதிக்கம் தவிர இந்திய ஆக்க அணுசக்திசார் உள்நாட்டு குழப்பம் போன்றவற்றுடன் பல்வேறுபட்ட அரசியல், பொருளாதார, சமூக பிரச்சினைகள் எனப்பல பிரச்சினைகளை அணுசக்தியினை மையப்படுத்தி இந்தியா எதிர்கொள்கின்ற நிலையில் இத்தகைய பிரச்சினைகளை மையப்படுத்தி இவ்ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது எனலாம்.